சென்னை: மத்திய அரசு மறுசீரமைக்கப்பட்ட மின் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் சீராக மின் விநியோகம் செய்வதுடன், மின்சாரத்தை கடத்தும்போது ஏற்படும் மின் இழப்பை பூஜ்ஜியமாக குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.3.03 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சில அடிப்படை கட்டமைப்பு பணிகளை ரூ.10,790 கோடி செலவில் மேற்கொள்ள தமிழக மின்வாரியத்துக்கு, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதில், ரூ.8,600 கோடி மத்திய அரசு சார்பில் கடனாக வழங்கப்படும். மேலும், இத்திட்டப் பணிகளை 5 ஆண்டுகளுக்குள் முடித்துவிட்டால், மத்திய அரசு வழங்கும் கடன் தொகையில் 60 சதவீதம் மானியமாக வழங்கப்படும். மீதியை மட்டும் செலுத்தினால் போதும்.
மறுசீரமைக்கப்பட்ட மின் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் ஏற்கெனவே உள்ள மின்வழித் தடங்களில் மீட்டர் பொருத்துவது, புதிதாக மின்வழித் தடங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு ஆண்டுக்கும் இலக்கு நிர்ணயித்து இப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
நடப்பு ஆண்டில் மின்தேவை அதிகரித்து வரும் இடங்களில் 26,300 மின்விநியோக டிரான்ஸ்ஃபார்மர்கள் பொருத்தப்பட உள்ளன. அத்துடன், மின்வழித் தடங்களும் அமைக்கப்படும். இந்த பணிகளுக்காக ரூ.2,050 கோடி செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
விரைவில் இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. அதன் பின்னர், டெண்டர் விடப்பட்டு இதற்கான பணிகள் தொடங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.