புதுடெல்லி: பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:தலைமை செயலர்களின் முதல் தேசிய மாநாட்டில் ஒன்றிய, மாநில அரசுகளின் தலைமை செயலர்கள், அரசுத்துறை உயரதிகாரிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த மாநாடு ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கானதாக அமையும். ஜூன் 15 முதல் 17ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், மாநிலங்களுடன் ஒன்றிணைந்து விரைவான மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சி குறித்து கவனம் செலுத்தப்படும். இந்த மாநாட்டில், தேசிய கல்விக் கொள்கை, நகர்ப்புற நிர்வாகம் மற்றும் விவசாய விளைப்பொருட்களில் தன்னிறைவு அடைதல் ஆகியவை குறித்து விரிவான விவாதங்கள் நடத்தப்பட உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மாநாட்டில் பிரதமர் மோடி நாளை, நாளை மறுதினம் தலைமை தாங்கி பங்கேற்கிறார்.