சென்னையில் வசித்து வந்த, திருமணமாகி ஆறு மாதங்களேயான இளம் தம்பதி ஒன்றாகத் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. திருநெல்வேலியைச் சேர்ந்த 22 வயதான சக்திவேல் சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் காயலான் கடை நடத்தி வந்தார். ஆறு மாதங்களுக்கு முன்பு இவருக்கும் இவருடைய உறவினரான 20 வயதான ஆர்த்திக்கும் இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் நடைபெற்றது. இருவரும் தனியாக சென்னையில் வசித்து வந்துள்ளனர்.
இவர்கள் வீட்டில் கிடைத்த கடிதத்தில் `திருமணமாகி முதலிரவின்போது தாம்பத்தியத்துக்கான முக்கிய நரம்பு அறுபட்டதால், இனி வரும் காலத்தில் குழந்தை பெற முடியாது அதனால் இருவரும் தற்கொலை செய்துகொள்வதாக’ குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயம் பற்றி சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் கார்த்திக் குணசேகரனிடம் கேட்டோம்.
“இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளதுபடி நரம்பு அறுபடுவ தெல்லாம் அவ்வளவு எளிதாக நடக்காது. அதுவும் இந்த இளம்வயதில் எல்லாம் அப்படி நடப்பதற்கு வாய்ப்பில்லை. உடலுறவின்போது ஆணுறுப்பில் fracture போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஆணுறுப்பில் நரம்புகள் ஆழமாகவே அமைந்திருக்கும். அதனால் தாம்பத்தியத்தின்போது நரம்புகள் அறுபடுவதெற்கெல்லாம் வாய்ப்பு மிக மிகக் குறைவு. இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களை இதுவரை என் மருத்துவ அனுபவத்தில் சந்தித்ததில்லை.
இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரை உளவியல் பிரச்னையே பிரதானமாக இருந்திருக்க வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினரிடம், பாலியல் சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் உடல் சார்ந்த பிரச்னைகளைவிட உளவியல்ரீதியான பிரச்னைகள்தான் அதிகம் இருக்கின்றன. முக்கியமாக தாம்பத்திய உறவின்போது பயம் மற்றும் பதற்றம் காரணமாக சரியாகச் செயல்பட முடியாமல் போகிறது. இதை performance anxiety எனக் கூறுவோம்.
அதாவது, முதலில் இரண்டு, மூன்று முறை சரியாகச் செயல்பட முடியாதபோது அதுவே ஒரு பயமாக உருவெடுத்துவிடுகிறது. தம்பதிகளுக்கு இடையில் இதுபோன்ற பிரச்னைகள் வரும்போது அது விவாகரத்து வரைகூட கொண்டு வந்து நிறுத்திவிடுகிறது என்றார்.
பாலியல் ரீதியான பிரச்னைகள் ஏற்பட்டால் தம்பதியர் என்ன செய்ய வேண்டும் எனவும் விளக்குகிறார் டாக்டர் கார்த்திக் குணசேகரன். “பாலுறவு தொடர்பான பிரச்னை வரும்போது உடனடியாக உரிய மருத்துவரை அணுக வேண்டும். நிறைய தம்பதிகள் மருத்துவரைப் பார்ப்பதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார்கள். இதனால் பிரச்னை அதிகமாகும். சண்டை உருவாகும்; பிரிவதற்குக்கூட வாய்ப்பாக அமையும். சரியான நேரத்தில் மருத்துவரை அணுகினால் பிரச்னையை சுலபமாகக் குணமாக்க முடியும்.
உடலளவில் ஆரோக்கியமாக இருந்தபோதும், ஒரு மாத காலம் தாம்பத்திய உறவில் இயல்பாக ஈடுபட முடியவில்லை எனில், மருத்துவரை அணுக வேண்டும். குழந்தையின்மை பிரச்னைக்கு (Infertility) பொதுவாக ஒரு வருடம் காத்திருந்து மருத்துவரைப் பார்க்கச் சொல்வார்கள். ஆனால், தாம்பத்திய உறவில் ஈடுபடுவதிலேயே ஒரு மாதத்துக்கு மேல் பிரச்னை இருந்தால் மருத்துவரை உடனே அணுகுங்கள்.
பாலியல் ரீதியான பிரச்னைகள் தம்பதிகளைத் தாண்டி அவர்களின் குடும்பங்களையும் பாதிக்கின்றன. திருமண உறவை விவாகரத்துவரைகூட கொண்டு செல்கிறது. இப்படி நடக்கும் விவாகரத்துகளில் பத்தில் ஒன்பது தேவையே இல்லாதவை, சரி செய்யக்கூடிய பிரச்னைகளே. சில நேரங்களில் கவுன்சலிங்கிலேயே பிரச்னையை சரிசெய்துவிடக்கூடிய பிரச்னைகள்” என்கிறார்.
எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல. தற்கொலை எண்ணம் எழுந்தால் தமிழக அரசின் 104 என்ற இலவச ஹெல்ப் லைன் எண்ணுக்குத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம்.