மதுரை: திமுகவை கடுமையாக எதிர்த்துவரும் மதுரை ஆதீனத்தை எம்பியாக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்று மதுரை ஆதீனம் மடம். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மடம் இது. மதுரை ஆதீனத்தின் 292-வது பீடாதிபதியாக அருணகிரிநாதர் இருந்து வந்தார். அவர் கடந்தாண்டு உடல்நலக்குறைவால் மறைந்தார். இதையடுத்து திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரானாக இருந்த சுந்தரமூர்த்தி தம்பிரான், ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என்ற பெயரில் 293-வது ஆதீனமாக நியமிக்கப்பட்டார்.
ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றதில் இருந்து திமுக அரசையும், இந்து சமய அறநிலையத் துறையையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான தஞ்சாவூர் கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டதை தட்டிக்கேட்ட தன்னை திமுக ரவுடிகள் மிரட்டியதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அப்போது, ‘திமுக ரவுடிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள பாதுகாப்பு கேட்டு பிரதமர் மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திப்பேன்’ என்றும் அவர் கூறினார்.
தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்துக்கு தடை விதிக்கப்பட்டதை கடுமையாக விமர்சித்தார். ‘உயிரே போனாலும் கவலைப்படாமல், தருமை ஆதீனத்தை நானே பல்லக்கில் சுமப்பேன்’ என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். பின்னர் தடை நீக்கப்பட்டு பட்டினப் பிரவேசம் சுமுகமாக நடந்து முடிந்தது.
திமுக எதிர்ப்பு கருத்துகளை முன்வைத்து வரும் மதுரை ஆதீனத்துக்கு பாஜக பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து வருகிறது. பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோது, அவரை மதுரை ஆதீனம் சந்தித்துப் பேச பாஜக நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.
அதன் பின்னர் மதுரையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட துறவிகள் மாநாட்டில் மதுரை ஆதீனம் பேசும் போது, ‘அறநிலையத் துறை கொள்ளையர்களின் கூடாரமாக உள்ளது. அறநிலையத் துறை நிர்வகிக்கும் கோயில்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வேண்டாம். கோயில்களை ஆதீனங்கள், மடாதிபதிகள் கொண்ட குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று பேசினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, ‘மதுரை ஆதீனம் தொடர்ந்து இப்படி பேசி வந்தால் பதில் சொல்வதற்கு பல வழிகள் உள்ளன. நாங்கள் பதுங்குவதை பயமாக கருதக்கூடாது. எங்களுக்கு பாயவும் தெரியும். மதுரை ஆதீனம் அரசியல்வாதிபோல் பேசிக்கொண்டிருப்பதை அறநிலையத்துறை அனுமதிக்காது’ என்றார்.
இதைத் தொடர்ந்து ‘மதுரை ஆதீனத்தை மிரட்டினால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்’ என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேட்டில், ‘அத்துமீறும் மதுரை ஆதீனம் அறிவதற்கு’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், மதுரை ஆதீனத்துக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சில தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் மதுரை ஆதீனத்தை முழுமையாக தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்தும் நோக்கத்தில் அவருக்கு நியமன எம்பி அல்லது பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்ய பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கேற்ப சமீப காலமாக மதுரை ஆதீனத்தை பாஜக நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்பினர் அடிக்கடி சந்தித்து பேசி வருகின்றனர். ஆதீனத்துக்கு பாதுகாப்பு கேட்டு பாஜக வழக்கறிஞர்கள் அணியினர் காவல் துறையிடம் மனு அளித்துள்ளனர்.
மதுரை ஆதீனத்துக்கும் அரசியலுக்கும் எப்போதும் தொடர்பு இருந்து வருகிறது. தற்போதைய ஆதீனத்துக்கு முன்பு ஆதீனமாக இருந்த அருணகிரிநாதர் முதலில் திமுக ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். பின்னர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி காலத்தின்போது அதிமுகவுக்கு ஆதரவாக குரல்கொடுத்தார். ஒரு கட்டத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக பகிரங்கமாக தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரைத் தொடர்ந்து தற்போதைய ஆதீனம் பாஜகவுக்கு பகிரங்கமாக ஆதரவளிப்பார் என அக்கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர்.
மதுரை ஆதீனத்தை எம்பியாக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இதுதொடர்பாக ஆதீனம் தரப்பிடம் கருத்துக் கேட்க பலமுறை தொடர்பு கொண்டும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.