திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிலைகள் சேதமடையாமல் இருக்க நடந்த ஜேஷ்டாபிஷேகம் நிறைவு பெற்றது. இதையொட்டி, உற்சவர்களுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு ஜேஷ்டாபிஷேகம் கடந்த கடந்த 12ம் தேதி தொடங்கியது. முதல் நாளன்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் தங்க கவசங்கள் அகற்றப்பட்டது. பின்னர், பஞ்சலோக சிலைகள் சேதம் ஏற்படாமல் இருக்க மூலிகை திரவியங்களால் ரங்கநாதர் மண்டபத்தில் சிறப்பு யாகமும், அபிஷேகமும் நடத்தப்பட்டது.முதல் நாள் வைர கவசமும், 2வது நாள் முத்து கவசமும் அணிவிக்கப்பட்டது. 3வது நாளான நேற்று பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட மூலிகை திரவியங்களால் கோயில் ஜீயர்கள் முன்னிலையில் தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர் வேத மந்திரங்கள் முழங்க ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, உற்சவர்களுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. இதையடுத்து, 4 மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி, பவுர்ணமி கருட சேவை ரத்து செய்யப்பட்டது. மீண்டும் தங்க கவசம் அடுத்தாண்டு ஜேஷ்டாபிஷேகம் வரை தொடர்ந்து அப்படியே அணிவிக்கப்பட்டு சுவாமிக்கு பூஜைகள், அபிஷேகம் நடைபெற உள்ளது.