தென்னிந்திய அளவில் டாப் 10 படங்களில் இடம் பிடித்த 'விக்ரம்'
நூற்றாண்டுக்கும் மேலான பெருமை கொண்டது இந்திய சினிமா. ஒரு மொழி என்றில்லாமல் நாடு முழுவதும் பெரும்பான்மையாக பேசப்படக் கூடிய மொழிகளில் கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், கடந்த சில வருடங்களில்தான் படங்களின் வசூல் 1000 கோடியைத் தாண்டும் அளவிற்கு சாதனை படைத்துள்ளன. 1000 கோடி வசூலைக் கடந்த படங்களாக 3 தென்னிந்தியப் படங்களும், ஒரே ஒரு ஹிந்திப் படமும் மட்டுமே இருக்கின்றன. “பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' ஆகிய தென்னிந்தியப் படங்களும் 'டங்கல்' ஹிந்திப் படமும்தான் மேலே குறிப்பிட்ட அந்தப் படங்கள்.
தென்னிந்திய அளவில் மேலே குறிப்பிட்ட மூன்று படங்களைத் தவிர, “2.0, பாகுபலி 1, சாஹோ, புஷ்பா, பிகில்'' ஆகிய படங்கள் மட்டுமே 300 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளன. இப்போது அந்த வரிசையில் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படமும் இடம் பிடித்துள்ளது. வெறும் 11 நாட்களிலேயே இப்படம் அந்த சாதனையைப் புரிந்துள்ளது. இதே வசூல் நிலவரம் தொடர்ந்தால் 400 கோடியைத் தொட்டாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.