புதுடெல்லி: பியூச்சர் நிறுவனத்துக்கு எதிரான அமேசான் மனுவை நிராகரித்த தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் அந்நிறுவனத்திற்கு ரூ200 கோடி அபராதம் விதித்து, 45 நாட்களுக்குள் செலுத்தும்படி உத்தரவிட்டது. இந்திய ரீடைல் சந்தையைக் கைப்பற்றும் முயற்சியில் அமேசான் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை, இத்துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பியூச்சர் ரீடைல் நிறுவனத்தை வாங்க போட்டியிட்டன. அமேசான் ஏற்கனவே பியூச்சர் கூப்பன்ஸ் தனியார் நிறுவனத்தில் சில முக்கியக் கட்டுப்பாடுகள் உடன் முதலீடு செய்து பங்குகளை வைத்திருக்கும் நிலையில், பியூச்சர் குரூப் கட்டுப்பாடுகளை மீறி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு ரூ24,713 கோடிக்கு விற்பனை செய்ய கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து அமேசானும், அமேசானுக்கு எதிராகப் பியூச்சர் குரூப் நிறுவனமும் வழக்கு தொடுத்துள்ளன. இந்நிலையில், தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் எம் வேணுகோபால், அசோக் குமார் மிஸ்ரா அடங்கிய அமர்வில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பியூச்சர் கூப்பன்களுடனான இணையதள வர்த்தக்கத்துக்கான முக்கியமான ஒப்பந்தத்திற்கான ஒப்புதலை இடைநிறுத்துவதற்கான நியாயமான வர்த்தக கட்டுப்பாட்டாளரான இந்திய போட்டிகள் ஆணையத்தின் முடிவை எதிர்த்து அமேசானின் மனுவை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் நிராகரித்தது.இந்திய போட்டி ஆணையத்தின் தீர்ப்பை உறுதி செய்த நீதிபதிகள், விதிகளை மீறிய அமேசான் நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்ட ரூ200 கோடி அபராதத்தை 45 நாட்களுக்குள் செலுத்துமாறு உத்தரவிட்டது. மேலும், இந்த மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இந்திய போட்டி ஆணையத்தின் தீர்ப்பிற்கு உடன்பாட்டில் உள்ளது என்றும் நீதிபதிகள் கூறினர். கடந்தாண்டு டிசம்பரில் பியூச்சர் நிறுவன பங்குகளை வாங்கிய அமேசான் நிறுவனம் பரிவர்த்தனைக்கு அனுமதி கோரிய போது, அமேசானுக்கு ரூ202 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.