நடிகர் மீசை ராஜேந்திரன் கார் கண்ணாடி உடைப்பு – நெல்லையில் நடந்தது என்ன?

முக்கூடல் அருகே பிரபல சினிமா நடிகரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல சினிமா நடிகர் மீசை ராஜேந்திரன். இவர், தற்போது சென்னை சூளைமேட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சொந்த ஊரில் நடந்த நிகழ்ச்சிக்காக வருகை தந்திருந்த நிலையில், முக்கூடல் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார.

image

ஏற்கனவே முத்துமாரியம்மன் கோவில் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு கோவில் பெயரைச் சொல்லி சிலர் பணமோசடி முறைகேடு செய்துள்ளதாக மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து பல்வேறு தீர்ப்புகள் ராஜேந்திரனால் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பை மீறி யாரிடமும் அனுமதி பெறாமல் கோவிலை புனரமைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் கோவிலுக்குச் சென்ற ராஜேந்திரன் அங்கு நடந்த சம்பவங்கள் குறித்து நீதிமன்ற தீர்ப்பு மற்றும் முன் அனுமதி பெறாமல் நடந்திருப்பதாகக் கூறி கேட்டுள்ளார். இதனால், அங்கு இருந்தவர்களுக்கும் இவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தன்னை தாக்க முயற்சித்ததாகவும் நீதிமன்ற தீர்ப்பை மீறி செயல்படுவதாகவும் கூறி முக்கூடல் காவல் நிலையத்தில் ராஜேந்திரன் தரப்பில் புகார் அளித்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

image

அப்போது சொக்கலான்புரம் மெயின் ரோடு அருகே குடும்பத்தினருடன் காரில் வந்தபோது ஒரு சிலர் வழிமறித்து காரின் பின்புற கண்ணாடியை கல்வீசி உடைத்து தங்களை தாக்க முயற்சித்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடிகர் மீசை ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார்.

தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை ஊருக்கு வரும்போது பிரச்னை வரும் என மதுரை உயர் நீதிமன்றத்தில் காவல் பாதுகாப்பிற்கு ஆணை வாங்கி உள்ள நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. தன் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.