புதுடெல்லி: அமெரிக்காவில் பணவீக்க விகிதம் 8 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்ததால் அந்நாட்டின் மத்திய வங்கியான பெடரல் வங்கி வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதனால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் பாதிப்பை சந்தித்தநிலையில் இன்று தங்கம் விலை பெரும் சரிவு கண்டுள்ளது.
உக்ரைன் போர் மற்றும் சீனாவில் கரோனா தொற்று அதிகரிப்பு போன்ற காரணங்களால் உலக அளவில் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் வங்கி கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து வட்டி விகிதத்தை பெடரல் வங்கி உயர்த்தி வருகிறது. இது இன்னமும் கடுமையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலிக்கிறது.
இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தங்கள் பங்குகளை விற்பனை செய்து விட்டு அதிகமான வட்டி தரும் அமெரிக்க வங்கிகளுக்கு தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதனால் இந்திய பங்குச்சந்தை நேற்று கடும் சரிவை சந்தித்தது.
இதுபோலவே தங்கத்தில் முதலீடு செய்திருந்த நிறுவனங்களும் விற்பனை செய்து வருகின்றன. இதன் காரணமாக தங்கம் விலை வீழ்ச்சி கண்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு மாதத்திற்கு முந்தைய அமர்வைத் தொட்டு பிறகு குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஸ்பாட் தங்கம் 0.6 சதவீதம் குறைந்து அவுன்ஸ் ஒன்றுக்கு 1,859.90 டாலர் ஆக இருந்தது. அமெரிக்க தங்க எதிர்கால வர்த்தகத்தில் 0.6 சதவீதம் குறைந்து 1,864.40 டாலராக ஆக இருந்தது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 95 ரூபாய் குறைந்து ரூ.4,740-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.760 குறைந்து ரூ.37,920-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.41,112-க்கு விற்பனையாகிறது.
இதுகுறித்து கோடக் செக்யூரிட்டீஸ் தரப்பில் கூறுகையில் ‘‘இந்த வாரத்தின் பிற்பகுதியில் அமெரிக்க பெடரல் வங்கி அடுத்த முடிவை எடுக்கவுள்ளது. அதற்கு முன்னதாக சந்தையில் நிச்சயமற்ற தன்மை அதிகமாக இருக்கலாம். மத்திய வங்கி வட்டி விகிதத்தை 0.5% உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் காரணியாக உள்ளது. எனவே இந்த வாரத்தில் நிச்சயமன்ற நிலைமை தொடர வாய்ப்புள்ளது’’ எனத் தெரிவித்துள்ளது.
ஐசிஐசிஐ டைரக்ட் தரப்பில் கூறுகையில் ‘‘உயர்ந்த பணவீக்கம் மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை பற்றிய கவலைகள் காரணமாக எம்சிஎக்ஸ் தங்கத்தின் விலை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிய வர்த்தகத்தில் இன்று திங்கட்கிழமை காலை சர்வதேச ஸ்பாட் மற்றும் காமக்ஸ் தங்கத்தின் விலை பலவீனமாகத் தொடங்கியுள்ளன. இது டாலரின் வலிமையைக் கண்காணித்து பணவீக்கத்தை குறைக்கும் பெடரல் வங்கியின் அணுகுமுறையால் ஏற்பட்டுள்ளது.’’ எனத் தெரிவித்துள்ளது.