பட்டினப்பாக்கம் அருகே கரை ஒதுங்கிய கற்களால் ஆன சாமி சிலைகள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் துலுக்கானத்தம்மன் கோவில் எதிரில் கருப்பு கலரில் பெரிய கற்கள் போல கிடந்ததை அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் கண்டனர். அருகில் சென்று பார்த்தபோது தான் அது கற்களால் ஆன சாமி சிலைகள் எனத் தெரிந்தது.
இதையடுத்து உடனே பட்டினப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கரை ஒதுங்கிய இரு சிலைகளையும் மீட்ட போலீசார், பட்டினம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். விசாரணையில் பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை, நாயன்மார் சிலை என தெரியவந்தது.
பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து 2 சிலைகளுக்கும் போலீசார் பூஜை செய்தனர். பிறகு மீட்கப்பட்ட சிலைகள் மயிலாப்பூர் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சிலைகள் எந்த கோயிலில் இருந்து திருடப்பட்டவை? இவற்றை வீசிச் சென்றவர்கள் யார?; என்ற கோணத்தில் பட்டினப்பாக்கம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார்.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறைக்கும், தொல்லியல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்படும். அவர்கள் வந்து பார்வையிட்டு எந்த காலத்தைச் சேர்ந்த சிலைகள் என கண்டறிவார்கள் என வட்டாட்சியர் தகவல் தெரிவித்துள்ளனர்.
போலீசார், சம்பவ இடத்தில் சிலைகளை கொண்டு வந்து போட்டது யார்? சிலைகள் இரண்டும் கடத்தப்பட்ட பழங்கால சிலைகளா? அல்லது வீட்டில் வழிபட்ட கற்சிலைகளா? என்பது குறித்து பட்டினப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM