புதுடெல்லி: ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ள நிலையில், அதை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார் பாஜக எம்.பி. வருண் காந்தி. இந்திரா காந்தியின் பேரனான இவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ஆனால் அண்மைக்காலமாகவே அவர் சொந்தக் கட்சியையே சரமாரியாக விமர்சித்து வருகிறார்.
ஆகையால், பாஜக எம்.பி. வருண் காந்தி சொந்தக் கட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்பது ஒன்றும் புதிதில்லைதான் என்றாலும், இன்று பிரதமர் சார்பில் அவரது அலுவலகத்திலிருந்து ஒரு ட்வீட் பகிரப்பட்ட வேகத்திலேயே அதற்கு எதிர்வினையாற்றி கட்சியினரை திகைப்பில் ஆழ்த்தியுள்ளார்.
முன்னதாக பிரதமர் அலுவலகம் ஒரு ட்வீட்டைப் பகிர்ந்தது. அதாவது அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை அரசுத் துறைகள் லட்சியமாகக் கொண்டு இயங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளதாக அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து கேள்வி எழுப்பியுள்ள பாஜக எம்.பி. வருண் காந்தி, “பிரதமருக்கு நன்றி. வேலையில்லா இளைஞர்களின் வலியையும், உணர்வுகளையும் நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். புதிதாக வேலைவாய்ப்பை உருவாக்குவதோடு நாம் 1 கோடி காலிப்பணியிடங்களை நிரப்பும் பணியில் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் வாக்குறுதி கொடுத்தபடி ஆண்டுக்கு 2 கோடி வேலைகளை உருவாக்க முடியும். அந்த இலக்கை அடைய கூடுதல் வேகத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
ஓவைசிக்கு பாராட்டு: முன்னதாக, நேற்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி பதிந்திருந்த வீடியோவைப் பாராட்டி பாஜக அரசுக்கு ஒரு குட்டு வைத்திருந்தார் வருண் காந்தி.
ஓவைசி தனது வீடியோவில், “மத்தியிலும், மாநிலங்களிலும் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. ஆனால் நாட்டில் வேலைவாய்ப்பினை வரலாறு காணாத அளவுக்கு அதிகமாக உள்ளது. நாட்டில் இன்றைய பெரும் பிரச்சினையே வேலையின்மைதான்.
நாட்டின் ஒட்டுமொத்த தலைவர்களும் அரசாங்கத்தின் கவனத்தை இந்தப் பிரச்சினையின் மீது திருப்ப முற்பட வேண்டும். வேலையில்லா இளைஞர்களுக்கு நீதி வேண்டும். அப்போதுதான் இந்த நாடு வலிமையான நாடாகும்” என்று கூறியிருந்தார். அந்த ட்வீட்டுக்கு நன்றி தெரிவித்திருந்தார் வருண் காந்தி. நான் எழுப்ப நினைத்த கேள்விகளை ஓவைசி முன்வைத்துள்ளார். நன்றி என்று தெரிவித்திருந்தார்.