சீதாமர்ஹி: பிஹார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்கிஷோர் ராய் நேற்று கூறும்போது, “நேபாளம் மற்றும் பூட்டான் எல்லையில் இந்தியாவின் சஷாஸ்த்ர சீமா பால் (எஸ்எஸ்பி) படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஒரு டாக்சியில் வந்த 2 பேர் அதிலிருந்து இறங்கி நேபாளத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை எஸ்எஸ்பி வீரர்கள் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களின் பெயர் லு லாங் (28) மற்றும் யுவான் ஹைலாங் (34) என தெரியவந்தது. அவர்கள் இருவரும் சீன பாஸ்போர்ட் வைத்திருந்தனர். ஆனால் அவர்களிடம் விசா இல்லை.
இவர்கள் இருவரும் நேபாளம் வழியாக, சாலையில் செல்லும் வாகனங்களில் லிப்ட் கேட்டு நொய்டாவுக்கு வந்ததும் அங்கு ஒரு வீட்டில் கடந்த 2 வாரங்களாக தங்கி இருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து எஸ்எஸ்பி அதிகாரிகள் அவர்களை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இருவரையும் கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.