புதுடெல்லி: ஸ்விக்கி, சோமேட்டோ உள்ளிட்ட ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் வாடிக்கையாளர் புகார் மீது எடுக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.சமீப காலமாக உணவு, ஆயத்த ஆடை, பலசரக்கு, மருந்துகள் உள்பட பெரும்பாலான பொருட்கள் ஆன்லைன் மூலமாகவே விற்கவும், டெலிவரி செய்யவும் படுகின்றன. இதில் நிறைய நன்மைகள் இருக்கும் போதிலும், அதே அளவு பல தீமைகளும் உள்ளன. வாடிக்கையாளர் ஆன்லைனில் தேர்ந்தெடுக்கும் வண்ணம் ஒன்றாக இருக்கும் ஆனால் அவர் கையில் கிடைப்பது வேறொரு வண்ணமாக இருக்கும். என்ன இருந்தாலும், நேரில் பார்த்து வாங்குவது போல் இல்லை என்று பலவாறு பலவகை புகார்கள் வாடிக்கையாளர்கள் தரப்பில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் நுகர்வோர் விவகாரத்துறை ஸ்விக்கி, சோமேட்டோ உள்ளிட்ட ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு அனுப்பிய அறிக்கையில், `நுகர்வோர் அளிக்கும் புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன? அவற்றை மேம்படுத்த எடுக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் என்ன? என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு 15 நாட்களுக்குள் அறிக்கை மூலம் பதிலளிக்க வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது. கடந்தாண்டு மட்டும் தேசிய நுகர்வோர் உதவி எண்ணில் ஸ்விக்கி மீது 3,613, சோமேட்டோ மீது 2,828 புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.