யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க-வின் கூட்டணி ஆட்சி நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் மூன்று அமைச்சர்களும், பா.ஜ.க தரப்பில் இரண்டு அமைச்சர்களும் இடம்பெற்றிருக்கின்றனர். இந்த நிலையில், புதுச்சேரி வில்லியனூரில் அமைந்திருக்கும் கோகிலாம்பிகை உடனுறை அருள்மிகு திருக்காமேஸ்வரர் கோயிலின் தேரோட்டம் சனிக்கிழமை நடைப்பெற்றது. அந்த விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, பா.ஜ.க-வைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இவர்கள் தேரை வடம்பிடித்து தொடங்கி வைக்க இருந்த நிலையில், அமைச்சர் நமச்சிவாயம் சற்று பின்னால் வந்து கொண்டிருந்தார். அவருக்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அவரின் பாதுகாப்பு அதிகாரியான ராஜசேகர், அங்கு நின்றிருந்த முதல்வர் ரங்கசாமியை தன் இடது கையால் தள்ளிவிட்டார். அதில் பின்னோக்கி சென்ற முதல்வர் ரங்கசாமி, அதன்பிறகு சுதாரித்துக் கொண்டு நின்றார். சமூக வலைதளங்களில் இது தொடர்பான வீடியோ வெளியாகி பொதுமக்களையும், முதல்வரின் ஆதரவாளர்களையும் கொதிப்படைய வைத்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்துப் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ”புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உண்மையான முதல்வராக செயல்படவில்லை.
டம்மி முதல்வராக இருக்கிறார். கவர்னர் தமிழிசைதான் சூப்பர் முதல்வராக செயல்படுகிறார். அவர்தான் எல்லா முடிவுகளையும் எடுக்கிறார். முதல்வர் வாயை திறப்பதே இல்ல. புதுவையில் ஐந்து முதல்வர்கள் இருக்கிறார்கள். அதாவது கவர்னர் தமிழிசைதான் சூப்பர் முதல்வர். ரங்கசாமி டம்மி முதல்வர். சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமார் போன்றவர்கள் முதல்வர் வேட்பாளர்களாக இருக்கிறார்கள். முதல்வர் ரங்கசாமி தன்னுடைய அதிகாரத்தை செலுத்தாத காரணத்தால் அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி அவரை தள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனின்ஸ்ட் கட்சியின் புதுவை பிரதேச செயலாளர் ராஜாங்கம், “என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் பெயரளவுக்குத்தான் முதல்வர் ரங்கசாமி செயல்பட அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஒரு மாநிலத்தின் முதல்வர்மீது கைவைத்து தள்ளிவிடும் அளவுக்குப் பாதுகாப்பு அதிகாரிக்கு துணிச்சல் எங்கிருந்து வந்தது? முதல்வரை அவமதித்த பாதுகாப்பு காவல்துறை அதிகாரிமீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல, “தேரோட்டத்தின்போது அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி நிதானத்தையும், பொறுமையையும் இழந்து முதலமைச்சரையே நெட்டித்தள்ளுவது காவல்துறைமீது களங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகமும், அரசும் உடனே விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார் மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தின் செயலாளர் ஜெகநாதன்.
அதேசமயம், “வில்லியனூர் தேரோட்ட நிகழ்ச்சியில் முதலமைச்சரை, அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி தள்ளி விட்டதாக நேற்றிலிருந்து செய்தியுடன் கூடிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அது முற்றிலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட காட்சி. அங்கே கூட்டம் அதிகமாக இருந்ததால் சற்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன் முழு வீடியோவும் பார்த்தால் உண்மை தெரியும். எனவே என்.ஆர்.காங்கிரஸ் பேரியக்க நண்பர்கள், தொண்டர்கள் யாரும் அதை நம்பவும், பெரிதுபடுத்தவும் வேண்டாம்” என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் செயலாளர்.
இந்நிலையில் இன்று புதுச்சேரி சட்டமன்றத்தின் முன்பு திடீரென கூடிய புதுவை அரசு பணியாளர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள், அங்கிருந்து கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்றனர். கவர்னர் ஊரில் இல்லாததால் குறைந்தளவு போலீஸாரே பாதுகாப்பு பணியில் இருந்தனர். ஊர்வலமாக வந்தவர்கள் தடுப்புகளை தள்ளிவிட்டு கவர்னர் மாளிகை நுழைவுவாயில் முன்பு சென்று தரையில் அமர்ந்தனர்.
பின்னர் கவர்னர் தமிழிசைக்கு எதிராக கோஷம் எழுப்பினர். முதலமைச்சர் ரங்கசாமியை தள்ளிய அதிகாரியை கைதுசெய்ய வேண்டும் என்று கோஷமெழுப்பியதுடன், அவரை கடுமையாக விமர்சித்தனர். அவர்களை கவர்னர் மாளிகையின் பாதுகாப்பு அதிகாரிகள் அப்புறப்படுத்த முயன்றனர். தகவலறிந்த பெரியகடை இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீஸார் ஜீப்பில் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக தூக்கி தடுப்புகளுக்கு அப்பால் இழுத்துச் சென்றனர். அப்போது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. அதனால் போராட்டக்காரர்கள் போலீஸாருக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். போராட்டக்காரர்கள் போலீஸ் இன்ஸ்பெக்டரை ஒருமையில் பேசினர். அதனால் ஆத்திரமடைந்த ஒரு போலீஸ்காரர் அந்த போராட்டக்காரரை தாக்கினார். இதனால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்தப் போராட்டத்தில் 20-க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட அந்த பாதுகாப்பு அதிகாரி தற்போது ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.