புதுச்சேரி: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டத்தின்போது அமைச்சர் நமச்சிவாயத்தின் பாதுகாவலர் சப்இன்ஸ்பெக்டர் ராஜசேகர், முதல்வர் ரங்கசாமியைத் தள்ளிய வீடியோ வைரலாக பரவியது.
முதல்வர் ரங்கசாமியை தள்ளிய பாதுகாப்பு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், என்ஆர் காங்கிரஸ் செயலாளர் ஜெயபால், கூட்ட நெரிசலில் இந்தச் சம்பவம் நிகழ்ந்து விட்டதாகவும், இதை தொண்டர்கள் பெரிதுபடுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், புதுவை அரசுப் பணியாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் இன்று சட்டப்பேரவை முன்பு திடீரென கூடினர். அங்கிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலமாக வந்தவர்கள் தடுப்புகளை தள்ளிவிட்டு ஆளுநர் மாளிகை நுழைவுவாயில் முன்பு சென்று தரையில் அமர்ந்தனர்.
பின்னர், ஆளுநர் தமிழிசைக்கு எதிராக கோஷம் எழுப்பினர். முதல்வரை தள்ளிய அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியை கைது செய்ய வேண்டும் என தரக் குறைவாக அவரை விமர்சித்து கோஷம் எழுப்பினர். அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் அப்புறப்படுத்த முயன்றனர். ஆளுநர் மாளிகை கதவை உலுக்கி ஏறினர். பின்னர், வாயில் கதவு முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பெரியகடை இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் ஜீப்பில் சம்பவ இடத்துக்கு வந்து, பணியாளர் கூட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமையிலான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தூக்கி தடுப்புகளுக்கு அப்பால் இழுத்துச் சென்றனர்.
அப்போது போலீஸாருக்கும், பணியாளர் கூட்டமைப்பினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீஸாருக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டரை ஒருமையில் பேசினார். இதனால், ஆத்திரமடைந்த போலீஸ்காரர் ஒருவர், இன்ஸ்பெக்டரை தரக்குறைவாக பேசலாம் என அவரை தாக்கினார்.
அப்பொழுது போராட்டக்காரர்களும் போலீஸாரும் ஒருவருக்கொருவர் சட்டைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டு கைகலப்பில் ஈடுபட்டனர். மற்ற போலீஸார் இருதரப்பையும் பிரித்தனர். தொடர்ந்து எஸ்.பி. வம்சிதரெட்டி அங்கு வந்து போராட்டக்காரர்களிடம் மனுவை பெற்றுக்கொண்டார். இறுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.