கொழும்பு:இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் திட்டங்களுக்கு, அந்நாட்டு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ஒப்புதல்
நம் அண்டை நாடான இலங்கை அன்னிய செலாவணி பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, மின் வெட்டு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இவற்றை சமாளித்து, பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடந்தது.
இது குறித்து, இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் திட்டங்களுக்கு, அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுஉள்ளது. இதன்படி, ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் விற்று முதல் உள்ள நிறுவனங்களுக்கு, 2.5 சதவீத சமூக மேம்பாட்டு வரி விதிக்கப்படும்.
ஏற்றுமதி, இறக்குமதி, தயாரிப்பு, சேவை, மொத்த மற்றும் சில்லரை விற்பனை துறைகளுக்கு, இந்த வரி விதிக்கப்படும். மின் வெட்டு பிரச்னையை சமாளிக்க, பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு, வெள்ளிக் கிழமை விடுமுறை விடப்படும். இந்த உத்தரவு, மின்சாரம், எரிசக்தி, கல்வி, சுகாதாரம், ராணுவம் உள்ளிட்ட துறைகளுக்கு பொருந்தாது.
பெட்ரோல், டீசல்
உணவுப் பொருட்களின் தட்டுப்பாட்டை சமாளிக்கவும், அரசு ஊழியர்களை விவசாய பணிகளில் ஊக்குவிக்கவும், அவர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை விடப்படும். இந்த திட்டம், அடுத்த மூன்று மாதங்களுக்கு அமலில் இருக்கும்.வரும், ஜூலை முதல் ‘ரேஷன்’ முறையில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விற்பனை செய்யவும், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.