பெங்களூரு : ‘பாலிவுட்’ நடிகர் சக்தி கபூரின் மகனும், நடிகருமான சித்தாந்த் கபூர், 37, போதை பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகன் சித்தாந்த் கபூர், ஹிந்தி திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.
அதிரடி சோதனை
பல்வேறு ஹிந்தி படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். இவரது சகோதரி ஷ்ரத்தா கபூர், ‘பாலிவுட்’ படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், கர்நாடகா மாநிலம், பெங்களூரு எம்.ஜி., ரோட்டில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், நேற்று முன்தினம் இரவு நடந்த விருந்தில், நடிகர் சித்தாந்த் கபூர் பங்கேற்றார்.
மொத்தம், 35 பேர் இந்த விருந்தில் பங்கேற்றனர். இங்கு, போதை பொருள் தடுப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ‘மரிஜ்வானா’ எனப்படும் போதை பொருள் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. விருந்தில் பங்கேற்ற அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில், நடிகர் சித்தாந்த் கபூர் உட்பட, ஐந்து பேர் போதை பொருள் உட்கொண்டது தெரியவந்தது.
ஐந்து பேர்
இதையடுத்து, அவர்கள் ஐந்து பேரையும், போலீசார் கைது செய்து அல்சூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.கன்னட திரை உலகை சேர்ந்தவர்கள் போதை பொருள் பயன்படுத்துவது, கடந்த 2020ல் வெளிச்சத்துக்கு வந்தது. நடிகை ராகினி திவேதி, சஞ்சனா கல்ரானி மற்றும் மறைந்த முன்னாள் அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா ஆல்வா ஆகியோர், போதை பொருள் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டனர்.
Advertisement