கோவையில் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கில் திடீர் திருப்பமாக அந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் உள்பட 5 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை காந்திபுரம் 100 அடி ரோடு ஜி.பி.சிக்னல் அருகே உள்ள எல்லன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக டாக்டர் ராமச்சந்திரன் என்பவர் உள்ளார். இவர் இந்த மருத்துவமனையை சென்னையை சேர்ந்த டாக்டர் உமாசங்கர் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார்.
இதையடுத்து சென்னை மருத்துவமனை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இந்த மருத்துவமனை இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு திடீரென்று 30 பேர் கொண்ட கும்பல் இந்த மருத்துவமனைக்குள் புகுந்து அங்கிருந்த ஊழியர்கள், மருத்துவர்களை மிரட்டியது மட்டுமின்றி அங்கிருந்த பொருட்களை உடைத்து சூறையாடி விட்டு தப்பி ஓடி விட்டது.
இது தொடர்பாக டாக்டர் ராமச்சந்திரன் ரத்தினபுரி போலீசாரிடம் அளித்த புகாரில் டாக்டர் உமாசங்கர்தான் கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்தினார் என்று கூறி இருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, இந்த மருத்துவமனையை வாடகைக்கு எடுத்த டாக்டர் உமாசங்கர் தமக்கு 4 கோடியே 95 லட்சம் ரூபாய் வாடகை தராமல் ஏமாற்றியதாகவும் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த மருத்துவமனையை உமாசங்கர் மற்றும் அவருடைய மேலாளர் மருதவான் ஆகியோர் விற்பனை செய்ய முயற்சி செய்வதாகவும் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் உமாசங்கர், மருதவான் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த டாக்டர் உமாசங்கர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கு கோவை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எல்லன் மருத்துவமனை நிர்வாக இயக்குனரான டாக்டர் ராமச்சந்திரன் உள்பட 5 பேர்தான் காரணம் என்பது தெரிய வந்தது.
கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில், டாக்டர் ராமச்சந்திரன் அடியாட்களை அனுப்பி டாகடர் உமா சங்கர் மீது தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது.
இதனை அடுத்து டாக்டர்கள் ராமச்சந்திரன், காமராஜ் மற்றும் ராமச்சந்திரனின் உதவியாளர் முருகேஷ், மூர்த்தி மற்றும் கார் ஓட்டுனர் பழனிசாமி ஆகியோரை கைது செய்த சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.