மும்பை: மகாராஷ்டிராவில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு கடந்த 10-ம் தேதி தேர்தல் நடந்தது.
7 பேர் போட்டியிட்ட நிலையில் பாஜக சார்பில் 3 பேரும் சிவசேனா கட்சி சார்பில் ஒருவரும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சார்பில் தலா ஒருவரும் வெற்றி பெற்றனர். பாஜக வேட்பாளர் தனஞ்ஜெய் மகாதிக்கிடம் சிவசேனா வேட்பாளர் சஞ்சய் பவார் தோல்வியடைந்தார்.
இதனிடையே, இந்தத் தேர்தலில் வாக்களித்த சிவசேனா கட்சி எம்எல்ஏ. சுஹாஸ் கண்டே, தேர்தல் விதிமுறைகளை மீறி தான் வாக்களித்த வாக்குச் சீட்டை வேறு ஒரு கட்சியைச் சேர்ந்த கொறடாவிடம் காட்டியதாக பாஜக புகார் செய்தது.
இதையடுத்து, சுஹாஸ் கண்டேயின் வாக்கு செல்லாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் சுஹாஸ் கண்டே மனு தாக்கல் செய்துள்ளார்.
தனது கட்சியின் கொறடா சுனில் பிரபுவிடம் மட்டுமே வாக்குச்சீட்டை காட்டியதாகவும் வேறு எந்தக்கட்சியினரிடமும் காட்டவில்லை என்றும் தனது வாக்கு செல்லாது என்ற அறிவிப்பால் தனது நற்பெயருக்கும் கவுரவத் துக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை ரத்து செய்யுமாறும் மனுவி்ல் சுஹாஸ் கண்டே கூறியிருந்தார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.