புதுடெல்லி: ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைகளில் இளம் வீரர்களை சேர்ப்பதற்கான அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், 4 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் ஆயுதப்படையில் சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கு வழக்கமான வீரர்களைக் காட்டிலும், குறைவான சம்பளம் வழங்கப்படும், ஓய்வூதியம் கிடையாது.இந்திய ஆயுதப்படையை பலப்படுத்த ஒன்றிய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, முப்படைகளில் இளம் வீரர்களை அதிகளவில் சேர்ப்பதற்கான புதிய அக்னிபாத் ஆட்சேர்ப்பு திட்டத்திற்கு ஒன்றிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படை தளபதிகள் டெல்லியில் திட்டம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், ‘‘அக்னிபாத் ஆட்சேர்ப்புத் திட்டம் சிறந்த மாற்றத்தை தரக்கூடிய முயற்சியாகும். இது ஆயுதப்படைகளில் இளம் வீரர்களின் பலத்தை அதிகரிக்கும். எப்போதும் இளமையாக வைத்திருக்கும். இத்திட்டத்தின் கீழ் ஆயுதப்படையில் சேவையாற்ற வாய்ப்பு பெறும் இளைஞர்கள் ‘அக்னி வீரர்கள்’ என்று அழைக்கப்படுவார்கள்’’ என்றார்.அக்னிபாத் திட்டத்திற்கு ‘டூர் ஆப் டூட்டி’ என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக முப்படை தளபதிகள் தலைமையில் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு இத்திட்டம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் விவரங்கள் வருமாறு:* அக்னிபாத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இருந்து 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள். இவர்களுக்கு பாலைவனம், மலைப்பிரதேசம், நிலம், கடல், காற்று என அனைத்து துறைகளிலும் பணிகள் வழங்கப்படும். இவர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பார்கள். முதல் 6 மாதங்கள் வழக்களான ராணுவ பயிற்சிகள் வழங்கப்படும். இந்த ஆண்டில் 46 ஆயிரம் பேர் இத்திட்டத்தின் கீழ் பணியில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. 4 ஆண்டு கால சேவை முடிந்த பின் அக்னி வீரர்களில் 25 சதவீதம் பேர் ராணுவத்தில் நிரந்தரமாக 15 ஆண்டு ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள். மீதமுள்ள 75 சதவீதம் பேர் பென்ஷன் இல்லாமல் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.* விருப்பமுள்ள தகுதியான 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தேர்வு எழுதி 4 ஆண்டு குறுகிய கால அக்னிபாத் ராணுவ திட்டத்தில் இணைந்து நாட்டிற்கு சேவை செய்யலாம். இத்திட்டத்தில் 4 ஆண்டு கால குறுகிய சேவை நிறைவு செய்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படும்.இவ்வாறு அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது ராணுவத்தில் குறுகிய கால சேவை அடிப்படையில் 10 ஆண்டு பதவிக்காலத்தில் வீரர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். இவர்கள் நீட்டிக்கப்பட்ட சேவையுடன் அதிகபட்சம் 14 ஆண்டுகள் வரை பணியாற்ற முடியும். ராணுவ வீரர்களுக்கு சம்பளத்துடன் ஓய்வூதியம் வழங்கப்படுவதால் அரசுக்கு அதிகப்படியான செலவு ஏற்படுகிறது. இதை குறைக்கவே குறைந்த சம்பளம், பென்ஷன் இல்லாத 4 ஆண்டு குறுகிய கால ஆட்சேர்ப்பு திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கப்பட்டது.*சம்பளம் எவ்வளவு?அக்னிபாத் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் அக்னி வீரர்களுக்கு, அபாயம் மற்றும் சிரமப்படிகளுடன் கூடிய மாதாந்திர ஊதியம் முப்படைகளிலும் வழங்கப்படும். 4 ஆண்டு பணிக்காலம் முடிவடைந்ததும், சேவா நிதி என்ற ஒரே தடவையிலான தொகுப்பு வழங்கப்படும். அதில் அவர்களது பங்களிப்பு மற்றும் வட்டி ஆகியவை அடங்கும். முதலாம் ஆண்டில் மாதாந்திர ஊதியமாக ரூ.30,000 நிர்ணயிக்கப்படும். இதில், தொகுப்பு நிதிக்கு ரூ.9,000 பிடித்தம் போக, எஞ்சிய ரூ.21,000 கையில் கிடைக்கும். 2ம் ஆண்டில் ரூ.33,000, 3ம் ஆண்டில் ரூ.36,500, 4ம் ஆண்டில் ரூ.40,000 ஆக ஊதியம் அதிகரிக்கப்படும். இதில் 30% பங்களிப்புத் தொகையாகப் பிடிக்கப்படும். எஞ்சிய 70% தொகை வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்குப் பின்னர் தொகுப்பு நிதியில் செலுத்தப்பட்ட ரூ.5.02 லட்சம் மற்றும் அரசு அளிக்கும் அதே தொகை சேர்த்து வட்டியுடன் சேவா நிதியாக ரூ.11.71 லட்சம் வீரர்களுக்கு வழங்கப்படும். இந்த சேவா நிதிக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இதைத்தவிர பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பயன்கள் அளிக்கப்பட மாட்டாது. அக்னி வீரர்களுக்கு பங்களிப்பு அல்லாத ஆயுள் காப்பீடு ரூ.48 லட்சத்துக்கு வழங்கப்படும். *விரைவில் பெண்கள்அக்னிபாத் திட்டம் குறித்து பேட்டி அளித்த கடற்படைத் தலைவர் அட்மிரல் ஆர்.ஹரி குமார், ‘‘இந்தத் திட்டத்தின் கீழ் பெண்களும் ஆயுதப் படைகளில் சேர்க்கப்படுவார்கள்’’ என்றார். ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே கூறுகையில், ‘‘இந்தத் திட்டம் ஆயுதப் படைகளில் ஆட்சேர்ப்பில் முன்னுதாரண மாற்றத்தைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது’’ என்றார். இந்த ஆண்டிற்கான அக்னி வீரர்கள் ஆட்சேர்ப்பு அடுத்த 3 மாதத்தில் முடிக்கப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.*முப்படை தலைமை தளபதி நியமனம் எப்போது?முப்படைகளின் முதல் தலைமை தளபதி பிபின் ராவத் கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி நீலகிரி ஹெலிகாப்டர் விபத்தில் காலமானார். அதைத் தொடர்ந்து அப்பதவி காலியாக உள்ளது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், ‘‘முப்படைகளின் தலைமை தளபதி விரைவில் நியமிக்கப்படுவார். அதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன’’ என்றார்.