மேகேதாட்டு அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்க கூடாது – பிரதமர் மோடிக்கு முதல்வர் எழுதிய கடிதத்தின் முழுவிவரம்

சென்னை: உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் எந்த விவாதத்தையும் நடத்தக் கூடாது என ஜல்சக்தி அமைச்சகத்துக்கு அறிவுறுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமருக்கு முதல்வர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு ஜூன் 17-ம் தேதி தங்களிடம் அளித்த கோரிக்கை மனுவில், காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று மத்திய ஜல்சக்தி துறைக்கு அறிவுறுத்தும்படி கேட்டிருந்தேன். அத்துடன், மேகேதாட்டு திட்டத்துக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கிய கர்நாடக அரசின் நடவடிக்கையை எதிர்த்து, கடந்த மார்ச் 21-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரிடம் வழங்கியுள்ளோம். அப்போது, தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மேகேதாட்டு திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படாது என்று அமைச்சர் உறுதி அளித்தார். இதுகுறித்து மே 26-ம்தேதி தங்களிடம் அளித்த மனுவிலும் தெரிவித்திருந்தேன்.

தமிழக விவசாயிகள் வேதனை

இவற்றை எல்லாம் தாண்டி, மேகேதாட்டு அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கை குறித்து ஜூன் 17-ம் தேதி நடக்கும் ஆணையத்தின் 16-வது கூட்டத்தில் விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இது தமிழக டெல்டா விவசாயிகளிடம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

குடிநீர், பாசனத்துக்கு காவிரி நீரையே தமிழகம் அதிக அளவில் நம்பியுள்ளது என்பது தங்களுக்கு நன்றாகவே தெரியும். நீண்ட சட்டப் போராட்டத்துக்கு பிறகு, 2018 பிப்.16-ல் உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பை அளித்தது. நாங்கள் எதிர்பார்த்த அளவு நீர் ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்றாலும், அட்டவணைப்படி வழங்கப்படும் பங்கு நீரை கொண்டு மேலாண்மை செய்துவருகிறோம். இதில் தடங்கல் ஏற்பட்டால், கடும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், உணர்வுப்பூர்வமான பிரச்சினையாகவும் மாறிவிடும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக மட்டுமே, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பில் கூறியிருப்பதை தாண்டி வேறு பணிகளை ஆணையம் செய்ய இயலாது.

இந்நிலையில், ஆணையத்தின்16-வது கூட்டத்தில், மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்க இருப்பதாக தெரிகிறது. மேகேதாட்டு திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என்ற மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் கருத்து அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சட்டப்படி மீறுவதாகும். இதை தமிழகம் ஏற்றுக்கொள்ளாது.

அதிகாரம் குறித்து கேள்வி

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே 3 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இது நீதிமன்ற வரம்புக்கு உட்பட்டது. தவிர, கடந்த ஜூன் 7-ல் மேலும் ஒரு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளோம். அதில், உச்ச நீதிமன்றத்தால் தெளிவுபடுத்தப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வரும் முன்னரே, காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேகேதாட்டு விவகாரம் விவாதிக்கப்படலாம் என அச்சப்படுகிறோம். அப்படி நடந்தால், உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை மாற்றி அமைக்கும் முயற்சியாக அது மாறிவிடும்.

எனவே, எங்கள் மனு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் முடியும் வரை மேகேதாட்டு அணையின் விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும்வரை, காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேகேதாட்டு திட்டம் தொடர்பாக எந்த விவாதத்தையும் நடத்தக் கூடாது என்று ஆணையத்தின் தலைவருக்கு அறிவுறுத்தும்படி மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகத்துக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.