ரஷ்ய அதிபரின் மலக்கழிவுகளைபத்திரப்படுத்தும் பாதுகாவலர்கள்| Dinamalar

பாரிஸ்:ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெளிநாடு செல்லும் போது, அவரது மலம் பத்திரமாக பெட்டியில் ரஷ்யா எடுத்து வரப்படுவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கண்காணிப்பு
பிரபல புலனாய்வு பத்திரிகையாளர்களான ரெஜிஸ் ஜென்டே, மிகைல் ருபெயன் இருவரும் பிரான்சிலிருந்து வெளியாகும் ‘பாரிஸ் மேட்ச்’ செய்தி பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளனர். அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:புடின் வெளிநாடு சென்றால், அங்கு கழிப்பறையில் அவரது மலத்தை சேகரித்து பெட்டியில் வைத்து ரஷ்யா எடுத்து வரும் வேலையை, அவரது பாதுகாவலர்கள் செய்து வருகின்றனர்.

மல சோதனையில் புடின் உடல்நிலை குறித்த எந்த தகவல்களும் வெளிநாடுகளுக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காகவே இந்தமுறை பின்பற்றப்படுகிறது. இதன்படி, 2017ல் புடின் பிரான்ஸ் சென்ற போதும், 2019ல் சவுதி அரேபியா சென்ற போதும், அவரது மலத்தை பாதுகாவலர்கள் சூட்கேசிஸ் வைத்து ரஷ்யாவுக்கு எடுத்து வந்தனர்.

இதை உறுதி செய்யும் வகையில், 2019ல் புடின் மீண்டும் பிரான்ஸ் சென்ற போது கண்காணிப்பு கேமராவில் ஒரு காட்சி பதிவாகியுள்ளது. அதில், கழிப்பறைக்குச் செல்லும் புடினுக்கு பாதுகாப்பாக ஆறு பேர் உடன் செல்கின்றனர்.

சந்தேகம்
புடின் வெளியே வந்ததும் பாதுகாவலர்களில் ஒருவர் சிறிய சூட்கேசுடன் அவர் பின்னால் வெளியே வருவது பதிவாகியுள்ளது. அந்த சூட்கேசில் என்ன உள்ளது என்பதை உறுதி யாக சொல்ல முடியவில்லை என்றபோதிலும் அது, புடினின் மலக்கழிவுதான் என நம்பப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், புடின் முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் உள்ளது அவர் உடல்நிலை குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அவருக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாக கூறப்படும் நிலையில், புடின் தன் உடல் நிலை குறித்து வெளிநாட்டு உளவாளிகளுக்கு தெரியக் கூடாது என நினைக்கிறார்.
சீன அதிபராக இருந்த மறைந்த மாசேதுங் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் மலத்தை ரஷ்ய சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலின் சோதிக்க உத்தரவிட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக, முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.