சண்டிகர்: ரூ. 2000 கோடி மதிப்பிலான முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி பஞ்சாப் முன்னாள் அமைச்சர் மீது வழக்குபதியப்பட்ட நிலையில், அவர் உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். பஞ்சாப் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் உணவு வழங்கல் துறை அமைச்சர் பாரத் பூஷன் ஆஷ், ஆட்சிக் காலத்தில், முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களில் முறைகேடு செய்ததாக ஒப்பந்ததாரர்கள் சங்கம் குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாப் – அரியானா உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், ‘என் மீதான புகாரை நியாயமாக விசாரிக்க வேண்டும். இதுதொடர்பாக என் மீது நடவடிக்கை எடுப்பதற்கு 7 நாட்களுக்கு முன்பாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும்’ என்று கூறியுள்ளார். மேலும் ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த பஞ்சாப் மாநில சுகாதார அமைச்சர் விஜய் சிங்லா, லஞ்சம் பேரம் பேசிய வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் மீது வழக்கும் பதியப்பட்டது. இவர், முன்ஜாமின் கோரி நேற்று உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அவரது மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.