பீஜிங்:கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பின் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த இரண்டு ஆண்டு, ‘விசா’ தடையை சீனா விலக்கிக் கொண்டுள்ளது.
கடந்த 2019 டிசம்பரில், சீனாவில் கொரோனா தொற்று பரவத் துவங்கியது. இதையடுத்து, அந்நாட்டில் பணியில் இருந்த இந்தியர்கள், குடும்பத்துடன் நாடு திரும்பினர். சிலர் குடும்பத்தினரை இந்தியா அனுப்பிவிட்டு தனியாக பணியை தொடர்ந்தனர்.
இதேபோல, மேல் படிப்புக்காக சீனா சென்ற மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த மாணவர்களும் நாடு திரும்பினர். கொரோனா பரவல் உச்சம் அடைந்ததை அடுத்து, இந்தியர்களுக்கான விசாவை சீனா நிறுத்தி வைத்தது. இரண்டு ஆண்டு களுக்கு மேலாகியும் இந்த தடை விலக்கிக் கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், சீனாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மீண்டும் படிப்பை தொடர விரும்புவதாக ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தியாவில் சிக்கியுள்ள தங்கள் குடும்பத்தினர் சீனா திரும்ப ஏற்பாடு செய்யுமாறு, அந்நாட்டில் பணியாற்றும் இந்தியர்கள் நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் கடந்த மாதம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், இந்தியர்களுக்கான விசா தடையை சீனா விலக்கிக் கொள்வதாக நேற்று அறிவித்தது. இதையடுத்து, இந்தியா – சீனா இடையிலான விமான போக்குவரத்து மீண்டும் துவங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement