விஜய் ஆண்டனி, சுசீந்திரனின் ‘வள்ளிமயில்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா, ஃபரியா அப்துல்லா ஆகியோர் நடித்துள்ள படம் ‘வள்ளிமயில்’. இந்தப் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீடு நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் விஜய் ஆண்டனி, சுசீந்திரன், ஃப்ரியா, எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, பாடலாசிரியர் விவேகா, தயாரிப்பாளர் தாய் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி பேசும்போது “சுசீந்திரன் எப்போதுமே டூ த பாயிண்ட் பேசக் கூடியவர். படத்தையும் அப்படிதான் எடுப்பார். ‘வள்ளிமயில்‘ படத்தோட கதையை மிக நீண்ட காலமாக சுசீந்திரன் உருவாக்கினார். இது ஒரு மிகச் சிறந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.

பாடலாசிரியர் விவேகா பேசும் போது “இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு நான் பல பாடல்கள் எழுதியிருக்கிறேன். ஆனால், ஹீரோ விஜய் ஆண்டனிக்கு இப்பொழுதுதான் எழுதியிருக்கிறேன். இது ஒரு சிறப்பான படமாக உருவாகியுள்ளது. படம் மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.

image

நாயகி ஃப்ரியா அப்துல்லா பேசும்போது “டான்சர், தியேட்டர் ஆர்டிஸ்ட்டாக இருந்து சினிமாவுக்கு வரும்போது இதை எனது கரியராக எடுத்துக் கொள்வேன் எனத் தெரியாது. ஆனால் இப்போது சினிமாவுடன் என்னை இணைத்துக் கொண்டேன். சுசீந்திரன் சார் எனக்கு இந்தக் கதையைக் கூறும் போது தமிழில் தான் சொன்னார். எனக்கு தமிழ் முழுமையாக தெரியாது என்றாலும் அந்தக் கதையைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவ்வளவு சிறப்பான கதை. இந்த படக்குழுவுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி” என தெரிவித்தார்.

சுசீந்திரன் பேசும் போது “இது எங்களது தயாரிப்பு நிறுவனத்தின் ஐந்தாவது திரைப்படம். நான்கு வருடமாக இதன் கதையை எழுதிக் கொண்டிருந்தேன். 80-களில் நடப்பது போன்ற ஒரு கதை என்பதால் அதற்காக பல ஆராய்ச்சிகள் செய்ய வேண்டி இருந்தது. சுவாரஸ்யமான வித்தியாசமான அனுபவத்தை படம் கொடுக்கும். இது தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் வெளியிட இருக்கிறோம். இந்தப் படத்தில் மூன்று பேரை அறிமுகப்படுத்துகிறோம். கனி அகத்தியன், தயாள், மறைந்த நடிகை கல்பனாவின் மகள் ஸ்ரீ.

image

இவங்க எல்லாரும் பெருமைமிகு அறிமுகமாக இருக்கும் என நம்புகிறோம். படத்தோட ஃபர்ஸ்ட் ஷெட்யூல் முடிந்திருக்கிறது. அடுத்த ஷெட்யூலை அடுத்த மாதம் துவங்க இருக்கிறோம். இந்த நேரத்தில் என்னுடைய ‘வெண்ணிலா ஃபவுன்டேஷன்’ என்ற அறக்கட்டளையை இதே மேடையில் துவங்குகிறேன்” என பேசியதுடன் அதற்கான லோகோவை வெளியிட்டார்.

விஜய் ஆண்டனி பேசும் போது ” ‘பிச்சைக்காரன்’ 2 மூலமாக நான் படம் இயக்க இறங்கி இருப்பதால் சுசீந்திரனிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன். இந்தப் படத்தை மிகத் தரமாக எடுக்கிறார். ஃப்ரியா திறமையான நடிகை, அனுஷ்காவைப் போல சிறப்பான நடிகையாக வருவார் என நம்புகிறேன். இந்தத் படத்தின் குழுவுக்கு பெரிய நன்றி” என்றார்.

செய்தியாளர்: ஜான்சன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.