நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி தொடருமானால் வெள்ளிக்கிழமை (17) வரை தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன, அனைத்து பேருந்து உரிமையாளர்களும் சேவையில் இருந்து விலக நேரிடலாம் என தெரிவித்துள்ளார்.
“20 வீத தனியார் பேருந்துகள் (4,000 பேருந்துகள்) நாளை (15) மற்றும் வியாழன் (16) ஆகிய இரு தினங்களில், கையில் இருக்கும் எரிபொருளைக் கொண்டு நாடு முழுவதும் சேவையில் ஈடுபடும்.
அதன் பிறகு இயக்கம் 3,000 ஆக மட்டுப்படுத்தப்படும்.
வெள்ளிக்கிழமைக்குள் நாங்கள் பேருந்துகளை இயக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிக விளைவுகளை சந்திக்க நேரிடும்
எமக்கு அரசாங்கத்துடன் அல்லது வேறு எந்தக் கட்சியுடனோ பிரச்சினைகள் இல்லை, ஆனால் தற்போதைய எரிபொருள் நெருக்கடியுடன் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வாழ வேண்டும். எனவே அரசாங்கம் இந்த நாட்டு மக்களுக்கு உண்மையைக் கூற வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்கள் நேற்று போதியளவு டீசல் விநியோகித்த போதிலும் இன்று அது நடைபெறவில்லை. வரவிருக்கும் வாரங்கள் மிகவும் முக்கியமானதாகத் தெரிகிறது.
எரிபொருள் நெருக்கடி மாறாமல் இருந்தால், இந்த அரசாங்கம் மே 9ம் திகதியை விட அதிக வன்முறை விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே, இந்த முக்கியமான கட்டத்தில் சரியான நேரத்தில் தீர்வு அவசியம்.
இந்நிலையில், நாட்டில் உள்ள மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.