மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இருக்கும் 10 லட்சம் பணியிடங்களுக்கு அடுத்த 18 மாதங்களில் ஆட்களை தேர்வு செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசு துறைகளில் கடந்த சில ஆண்டுகளாகவே லட்சக்கணக்கிலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. கடந்த ஆண்டு ஜூலை மாத நிலவரப்படி மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 8.72 லட்சம் இடங்கள் காலியாக இருந்தன. தற்போது அவை 10 லட்சமாக அதிகரித்துள்ளன. இந்த பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் மத்திய அரசின் பல்வேறு துறை சார்ந்த பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகளும் கையில் எடுத்து ஆளும் பாஜகவுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது.
இந்நிலையில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகவே தலையிட்டு வருகிறார்.. காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து பல முறை உயரதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.
இந்த சூழலில், பிரதமர் அலுவலகம் இன்று ஓர் அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அதில், “மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் இருக்கும் மனித வளங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார். அதன் அடிப்படையில், அடுத்த 18 மாதங்களில் மத்திய அரசின் துறைகளில் இருக்கும் 10 லட்சம் காலிப் பணியிடங்களுக்கு உடனடியாக ஆட்களை தேர்வு செய்யுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM