கேரளாவில் மாடித்தோட்டம், கோழி வளர்த்தல், மீன் வளர்த்தல் என, வீட்டைச் சுற்றி உணவு உற்பத்தி செய்வதை, அம்மாநில அரசு ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் ஆலப்புழா அருகே புன்னப்புரா தெற்கு பஞ்சாயத்தைச் சேர்ந்த பிஜு குமார் என்பவர், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, வங்கியில் கடன் பெற்று, பிவி 380 என்ற சங்கரா இனத்தைச் சேர்ந்த 25 கோழி குஞ்சுகளை வாங்கி வளர்க்கத் தொடங்கினார். இப்போது கோழிகள் முட்டையிட்டு வருகின்றன. இந்நிலையில், அதில் ஒரு கோழி சோர்வாக இருந்ததை அடுத்து, அதனை கடந்த ஞாயிற்றுக்கிழமை தனிமைப்படுத்தியுள்ளார் பிஜூ குமார். அப்போதுதான், அந்த கோழி நடக்க முடியாமல் காலை இழுத்துக்கொண்டிருந்தது, தெரியவந்தது. வீட்டின் அருகே ஒரு பிளாஸ்டிக் கோணியை (சாக்கு) தரையில் விரித்து, கோழியை அதில் விட்டுள்ளார். பிஜூ-வின் மகளான 4-ம் வகுப்பு படிக்கும் தேவி பிரியா, தனிமைப்படுத்தப்பட்ட அந்த கோழிக்கு, சின்னு என பெயரிட்டுள்ளார்.
கோழிக்கு அடிபட்டிருக்கலாம் என கருதிய பிஜூ, வலி நிவாரணத் தைலத்தை அதன் காலில் தடவியுள்ளார். அதன் பின்னர், ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் அந்த கோழி, முட்டையிட தொடங்கியது. 2 நிமிடங்கள், 5 நிமிடங்கள் என்ற இடைவெளியில் தொடர்ந்து முட்டைகளை போட்டுக் கொண்டே இருந்துள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் கோழியை சென்று பார்த்துள்ளனர். மதியம் 2.30 மணி வரை முட்டை போட்டுக் கொண்டே இருந்துள்ளது அந்த கோழி.
சின்னு கோழி, சுமார் 6 மணி நேரத்தில் 24 முட்டைகளை இட்டதாக கூறப்படுகிறது. அந்த முட்டைகளை உடைத்து பார்த்தபோது அது சாதாரண முட்டைப் போலவே இருந்துள்ளது. வரிசையாக 24 முட்டைகளை போட்ட பிறகும், எந்த சோர்வும் இல்லாமல் இருந்துள்ளது சின்னு கோழி. 6 மணி நேரத்தில், கோழி ஒன்று 24 முட்டைகளிட்டதாக வெளியான தகவல் கேரளாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுபற்றி சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கேரள மாநிலத்தின் கால்நடை மருத்துவ பல்கலை கழக விஞ்ஞானிகளும் நேரில் சென்று பார்வையிட்டனர். கோழி மற்றும் வாத்து பராமரிப்பு துறை உதவி பேராசிரியர் பினோஜ் சாக்கோ, பேசும்போது, ”இது அரிதான சம்பவம். கோழிக்கு ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக தொடர்ந்து முட்டை போட்டிருக்க வாய்ப்பு உண்டு. என்ன காரணம் என்பதை எங்கள் பல்கலைக்கத்தின் மூலம் கோழியை ஆய்வு செய்ய இருக்கிறோம். அதன்பின்பே 24 முட்டைகளை எப்படி இட்டது என்பதை கண்டுபிடிக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.