கடந்த 6 மாதங்களில் பல தொடர்களை வென்று இருந்தாலும் நான் சிறப்பாக விளையாடவில்லை, போட்டிகளில் மாற்றங்கள் மேற்கொள்வது குறித்த பயிற்சிகளை தற்போது பயிற்சியாளருடன் இணைந்து மாற்றங்களை மேற்கொண்டு வருகிறேன் என இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா புதிய தலைமுறைக்கு பிரத்தியேகமாக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கும் பி டீம் அணிக்கான பயிற்சி முகாம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரக்ஞானந்தா புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில்: “ஒலிம்பியாட் தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒலிம்பியாட் போன்ற தொடர் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் நடைபெறுவது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தத் தொடரை இங்கு நடத்த உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட அரசுக்கு நன்றி.
ஒலிம்பியாட் போன்ற தொடர்களுக்கு முன்னால், இதுபோன்ற பயிற்சி முகாம் முக்கியம். அணியில் உள்ள வீரர்களை புரிந்துகொள்ளலாம். குழுவாக விளையாடினாலும், நம்முடைய போட்டிகளில் வெற்றி பெறுவது முக்கியம். எனவே கூடுதல் கவனம் செலுத்துகிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த 6 மாதங்களில் தொடர்ச்சியாக பல தொடர்களை வென்று வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “பல தொடர்களை வென்று இருந்தாலும், என்னுடைய போட்டி சிறப்பாக இல்லை. தொடர்ச்சியாக ஒரு சில தவறுகளை மேற்கொண்டேன். எனவே அதனை மாற்றுவது குறித்து பயிற்சியாளருடன் இணைந்து மாற்றங்களை மேற்கொண்டு வருகிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM