IRCTC: ரயில் பயணிகள் ஹேப்பி – இனி எளிதாக போர்டிங் பாயின்ட்டை மாற்றலாம்!

ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுத்த பயணிகளும், இணையதளம் வாயிலாக, ரயில் நிலையத்தை மாற்றும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

தற்போது வரை விரைவு ரயிலில் பயணிக்க இணையதளம் வாயிலாக டிக்கெட்டை முன்பதிவு செய்த பயணிகள், ரயில் புறப்பட 4 மணி நேரத்துக்கு முன்பே, அதாவது ரயிலில் சார்ட் தயாரிப்பதற்கு முன்பே தாங்கள் ரயிலில் ஏறும் ரயில் நிலையத்தை ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது 139 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு மாற்றிக் கொள்ளும் வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

இந்த வசதி தட்கல் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கும் பொருந்தும். சில தவிர்க்க முடியாத தருணங்களில், பயணிகள் தாங்கள் புறப்பட வேண்டிய ரயில் நிலையத்தில் ரயிலை பிடிக்க முடியாமல் போகும் போது இந்த வசதி அவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

இனி ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுத்த பயணிகளும், ரயில் புறப்பட 4 மணி நேரத்துக்கு முன்பு, www.irctc.co.in என்ற இணையதளத்துக்குச் சென்று அங்கே மெயின் மெனுவுக்குக் கீழே இருக்கும் மோர் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில், தற்போது புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் கவுன்ட்டர் டிக்கெட் போர்டிங் பாயிண்ட் சேஞ் என்ற வாய்ப்பை கிளிக் செய்யவும்.

அதில், டிக்கெட் முன்பதிவு செய்ய அளிக்கப்பட்ட மொபைல் எண்ணைக் கொடுத்து, அதில் வரும் ஓடிபியை பதிவிட்டால், உங்கள் டிக்கெட்டில் குறிப்பிட்ட புறப்படும் இடத்தை மாற்றும் வாய்ப்பு வரும். இதனால், குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் பயணி ஏறாமல் விட்டுவிட்டால், அவரது இருக்கை வேறு யாருக்கும் மாற்றி வழஙகப்படாது.

இந்த வசதி இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு, 2019 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி நடைமுறைக்கு வந்த நிலையில், தற்போது ரயில் நிலையங்களில் எடுத்த ரயில் டிக்கெட்டுகளுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதற்கு ஏற்ற வகையில் ஐஆர்சிடிசி இணையதளம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

அதற்கு முன்பு வரை, ஒரு பயணி, தான் ரயிலில் ஏறுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பு ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாகவோ அல்லது நேரடியாக ரயில் நிலையத்துக்கு நேரில் வந்து எழுதிக் கொடுத்துத் தான் புறப்படும் ரயில் நிலையத்தை மாற்ற முடியும் என்ற சிரமம் இருந்தது. தற்போது அது எளிதாக்கப்பட்டு உள்ளது. ரயில்வே வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின் அடிப்படையில், விரைவு ரயிலுக்கான டிக்கெட்டுகளில் 65 சதவீதம் அளவுக்கு ஆன்லைன் மூலம்தான் பதிவு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.