மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்றைய தினம் ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான புதிய திட்டமான அக்னிபத்-ஐ அறிமுகப்படுத்தினார். அரசின் இந்த திட்டத்தை ஆதரித்தும், விமர்சித்தும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த திட்டத்தின் கீழ் போர்ப் பயிற்சி பெறும் இளைஞர்கள், சிவில் சமூகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக ராணுவ படைவீரர்கள் மற்றும் இராணுவ வல்லுநர்கள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி, “ஒரு தொழில்முறை இராணுவத்தை வளர்ப்பதற்குப் பதிலாக, நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஓய்வூதிய பணத்தைச் சேமிக்க ஒப்பந்தத்தில் வீரர்களை முன்மொழிகிறது. 3 முதல் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பயிற்சி அளித்த ஒப்பந்தப் படைவீரர்களுக்கு வேறு வாய்ப்புகள் வழங்காமல், தனியாருக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற இந்த தேச விரோத திட்டத்தைக் கைவிடுங்கள்” என அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக, Indo-Asian News Service (IANS) மேஜர் ஜெனரல் (ஓய்வு) பி.கே ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “இந்திய ராணுவம் உலகின் மிகச் சிறந்த மற்றும் சக்திவாய்ந்த படைகளில் ஒன்றாகும். இருப்பினும், அக்னிபத் மாடல் மூலம் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் இளைஞர்களை பணியமர்த்துவது ராணுவப்படைகளுக்குச் சரியான முறையல்ல. ஒரு நபர் ஒரு முழுமையான ராணுவ வீரராக மாறுவதற்கு சுமார் ஆறு முதல் ஏழு ஆண்டுகள் ஆகும். ஆனால் அதற்கு முன்பே இந்த இளைஞர்கள் வேலையை விட்டுவிடுவார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியா பாகிஸ்தான், சீனா என இரண்டு முனைகளிலிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் போது, `அக்னிபத்’ திட்டம் நமது ஆயுதப் படைகளின் செயல்பாட்டுத் திறனைக் குறைக்கும். நமது படைகளின் கண்ணியம், மரபு, வீரம், ஒழுக்கம் ஆகியவற்றில் சமரசம் செய்வதை பா.ஜ.க அரசு நிறுத்த வேண்டும்” எனப் பதிவிட்டிருக்கிறார்.