நேற்றைய தினம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியப் பாதுகாப்புத்துறையில் `அக்னிபத்’ எனப்படும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தின் மூலம் இந்திய இளைஞர்கள், ஆயுதப்படைகளில் அக்னி வீரராக பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த திட்டத்தின் கீழ் இளைஞர்கள் சேர்வதற்கு வயது வரம்பு 17-லிருந்து 21 வயது என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள், ஆறுமாதகால ஆயுதப்படை பயிற்சி உட்பட நான்கு ஆண்டுகள் இந்த திட்டத்தில் சேவையில் இருப்பார்கள். இந்தக் காலகட்டத்தில், அவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.30,000-லிருந்து, ரூ.40,000 வரை வழங்கப்படும்.
அவர்களிலிருந்து 25 சதவிகித பேர் இந்திய ஆயுதப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுவர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வழக்கமான ஆயுதப்படையில் சுமார் 15 ஆண்டுகள் பணியமர்த்தப்படுவர். மீதமுள்ள 75 சதவிகிதம் பேர் ரூ.11 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான சேவா நிதி தொகுப்புடன் வெளியேறுவார்கள் எனக் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு ராணுவ படைவீரர்கள் மற்றும் இராணுவ வல்லுநர்கள் சிவில் சமூகத்தில் போர்ப் பயிற்சி பெற்ற இளைஞர்கள் இருப்பது குறித்து கவலை தெரிவித்திருக்கின்றனர். இது அவர்களின் கருத்துப்படி, சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்கும். குறுகிய கால, ஒப்பந்த அடிப்படையில் ஆள்சேர்ப்பு தேவையா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு மக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், “பா.ஜ.க அரசு ஆயுதப் படைகளுக்கு ஆள்சேர்ப்பை ஏன் சோதனைகளுக்கான ஆய்வகமாக மாற்றுகிறது? பல ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களை ஒரு சுமையாகப் பார்க்கிறதா அரசு? இளைஞர்கள் இந்த நான்காண்டு ஆட்சியை மோசடி ஆட்சி என்று அழைக்கிறார்கள். பிகார் ராணுவ வீரர்களும் இந்த திட்டத்தை எதிர்த்திருக்கின்றனர்” எனப் பதிவிட்டிருக்கிறார்.