கவுகாத்தி: அசாமில் மீண்டும் கொட்டித் தீர்த்த கனமழையால், கவுகாத்தியில் முக்கிய சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தலைநகர் கவுகாத்தியில் மீண்டும் கனமழை கொட்டியது. இதனால், முக்கிய சாலைகள், தெருக்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து, தாழ்வான பகுதியில் சிக்கிய மக்களை ரப்பர் படகுகள் மூலம் மீட்டனர்.பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. வீட்டு சுவர் இடிந்து, நிலச்சரிவில் சிக்கி 4 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் அசாமில் மழை காரணமாக 42 பேர் பலியாகி உள்ளனர். சாலைகளில் மழைநீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல ரயில் நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.