அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தனது ஜாமீன் நிபந்தனை தளர்த்துமாறு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஆவின் நிறுவனங்களில் பணி வழங்குவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே உள்ளார். விசாரணை நடைபெறும் காவல் எல்லையில் இருந்து வெளியே செல்லக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, வரும் ஜூன் 22 முதல் 25-ம் தேதி வரை சென்னையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் தான் பங்கேற்க வேண்டும் என்பதால் தனது ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க கோரி, ராஜேந்திர பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்ற கோடைக்கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, ஹீமா கோலி முன்னிலையில் இன்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனுவை பரிசீலித்த நீதிபதி ஹீமா கோலி, “கட்சியின் பொதுக்குழுவில் கலந்து கொள்ளவில்லை என்றால் ஒன்றும் ஆகிவிடாது. மேலும் இதுதொடர்பான மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டும் இந்த அமர்வில் விசாரிக்க முடியாது எனக்கூறி அவரது கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார். இதனால் அதிமுக பொதுக்குழுவில் ராஜேந்திர பாலாஜி பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM