“ஆவணங்களைக் கையில் வைத்துக்கொண்டு பேசுகிறோம்; அமைச்சர் தப்ப முடியாது!" – அண்ணாமலை

தஞ்சாவூரில் ரஜினி ரசிகர் மன்ற மாவட்டச் செயலாளரான ரஜினி.கணேசன் தலைமையில் சுமார் 1,000 பேர் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க-வில் இணையும் நிகழ்ச்சி தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த அண்ணாமலைக்கு ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் தஞ்சாவூர் ரயிலடியில் 80 கிலோ எடை கொண்ட ரோஜாப்பூ மாலையினை கிரேன் மூலம் போட வைத்து பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர். இதில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு.முருகானந்தம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

அண்ணாமலை

பின்னர் பேரணியாக மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து பேசிய ரஜினி.கணேசன், “ஆன்மிக அரசியலைத் தேடி பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறோம். சாதி, மதம் கடந்த லஞ்சம் ஊழலற்ற வெளிப்படைத் தன்மையான ஆட்சியினை பா.ஜ.க வழங்கி வருகிறது. அதில் ஈர்க்கப்பட்டு பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறோம்” என்றார்.

அவரைத் தொடர்ந்து அண்ணாமலை, “தமிழ்நாட்டில் எப்போதும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே. அவரின் மனிதத் தன்மையைப் பார்த்து மக்கள் கொடுத்த பெயர்தான் சூப்பர் ஸ்டார். அது எப்பவும் ரஜினியிடம் மட்டுமே இருக்கும். தமிழ்நாட்டில் வேறு யாருக்கும் போகாது.

பா.ஜ.க-வில் இணைந்த ரஜினி ரசிகர்கள்

நடிகர் என்பதைத் தாண்டி நல்ல பண்பாளர், தேசத்தை நேசிக்கக் கூடியவர். ஆன்மிக பாதையில் பயணம் செய்யக் கூடிய பண்புடையவர். சின்ன பொறுப்புக்காக அடித்துக்கொள்ளும் உலகத்தில், பதவி நாற்காலி தயாராக இருந்தும் வேண்டாம் என்று சொன்னவர். கட்டுக்கோப்பான அவரது மன்றத்திலிருந்து அவருடைய ரசிகர்கள் பா.ஜ.க-வில் இணைந்திருப்பது பெருமையாக உள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் தேவை, காரணம் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை லஞ்சம் நிறைந்துள்ளது. அலுவலர்கள், அமைச்சர்கள் வரை 20 சதவிகிதம் கமிஷன் என்ற வார்த்தை பேசும் பொருளாக மாறி விட்டது.

சமூகத்தில் லஞ்சம் என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டால், அடுத்த கட்டத்திற்கு அந்த சமூகம் செல்லாது. அதை மாற்ற வேண்டிய கடமை பா.ஜ.க-விற்கு உள்ளது. இதைதான் சூப்பர் ஸ்டார் ரஜினி சிஸ்டம் கெட்டு போச்சு எனக் கூறினார். இதை மாற்ற வேண்டும். இந்நிலையில், மாற்றம் என்பது மக்கள் மனதில் வரத் துவங்கியுள்ளது. ஆன்மிக பாதையில் மாநிலத்தைக் கட்டமைக்க வேண்டும். அனைத்து சமூக மக்களுக்கான அரசு அமைய வேண்டும்.

அண்ணாமலை, ரஜினி.கணேசன்

ஒரு சமூகத்தை தூக்கிப் பிடித்து, ஒரு சமூகத்தைக் கீழே இறக்கிப் பிடிக்கும் அரசு தேவையில்லை. அரசியல் என்றால் சுய ஒழுக்கம் வேண்டும். ஆரம்பக் காலத்தில் காங்கிரஸ் கட்சியில் ராஜாஜி, காமராஜர் போன்றவர்களிடம் தனி மனித ஒழுக்கம் இருந்தது. மக்களுக்காக அரசியல்வாதிகள் அப்போது அது போல் நடந்து கொண்டனர். அது போன்ற அரசியல்வாதிகள் தமிழ்நாட்டுக்குத் தேவைப்படுகின்றனர். பா.ஜ.க-வில் தனி மனிதனுக்கு அடையாளம் கொடுப்பது கிடையாது. ஆனால், அந்த தனி மனிதன் சிறப்பாக இருக்கும் போது, அவருக்கான அடையாளம் தேடி வந்து விடுகிறது.

பா.ஜ.க-வில் நமது கலாசாரத்தை, மொழியை விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. பா.ஜ.க-வின் தன்மையை மக்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் உணர துவங்கி விட்டனர். மாநிலக் கட்சிகளுக்கு ஒரு ஒனர்கள் உள்ளனர். ஆனால் பா.ஜ.க போன்ற தேசிய கட்சியில் தொண்டன் தான் தலைவன். உங்களின் கலாசாரத்தையும், மொழியையும் விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. கலாசாரத்தில் இருந்து பா.ஜ.க மாறுபட்டால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

கிரேனில் ரோஜா பூ மாலை

தமிழ்நாட்டில் ஆன்மிகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால், இந்து மட்டும்தான் என நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆன்மிக வழியில் பா.ஜ.க-வில் ஆட்சி என்றால் பணம் சம்பாதிப்பது கிடையாது. எனக்குப் பிறகு குடும்ப வாரிசுதான் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது கிடையாது. ஆன்மிகம் என்றால் பணம், பதவி மீது பற்று இல்லாமல் இருக்கும் அரசியல் தான். ஆன்மிகத்திற்கு அடிப்படை அறிவு இல்லாதவர்கள் தமிழ்நாட்டில் ஆன்மிகம் என்றால் இந்துத்துவா எனக் குதித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

பா.ஜ.க கட்சியில் இணைந்தவர்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க-வின் அருமை புரியும். தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் நடக்கத்தான் போகிறது. அது காலத்தின் கட்டாயம், ஆண்டவனின் உத்தரவு. அதை மனிதர்கள் யாரும் திட்டம் போட்டு நிறுத்த முடியாது. அது பஞ்சபூதங்களின் முடிவு. அதில் நாம் எல்லாம் சிறிய துரும்பாக இருந்து செயல்படப் போகிறோம்” என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பா.ஜ.க வைத்த குற்றச்சாட்டிலிருந்து பின்னால் போகாமல், இன்னும் ஒரு படி முன்னால்தான் போகிறோம். ஆவின் நிறுவனத்திடம் பொருள்கள் இல்லை என்றும், ஆவின் நிறுவனம் பரிசீலனை செய்யவில்லை எனவும், ஆவின் நிறுவனம் பங்கேற்கவில்லை என்றும் கூறுகின்றனர். நாங்கள் கொடுத்துள்ள ஆவணத்தில் ஆவின் நிறுவனம் மார்ச் 15-ம் தேதி கூட்டத்துக்கு வந்தது. திட்டக் குழுத் துணைத் தலைவர் ஆவின் நிறுவனத்தின் பொருளை ஏற்றுக் கொண்டு மார்ச் 31-ம் தேதி கூட்ட நிரலில் ஊட்டச்சத்து தொகுப்பைத் திருத்தி பி.எல்.ஹெல்த் மிக்ஸ்க்கு பதிலாக ஆவின் பெயரைப் போட்டு அனுப்பினார். இது தொழில்நுட்ப விஷயம்.

சுகாதாரத்துறை அமைச்சர் தொழில்நுட்ப வல்லுநர் கிடையாது; அரசியல்வாதி. மக்களைத் திசை திருப்பும் அமைச்சர் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். பா.ஜ.க வெளியிட்ட ஆவணத்துக்குப் பதில் அளிக்க வேண்டும். மாநிலத் திட்டக்குழுத் துணைத் தலைவர் ஆவின் ஹெல்த் மிக்ஸை அரசுக்கு மார்ச் 31-ம் தேதி பரிந்துரை செய்தார். எட்டு நாள்கள் கழித்து, தொழில்நுட்பக் குழு அனுப்பிய ஊட்டச்சத்து தொகுப்பைத் திரும்பப் பெற்று அவினுக்குக் கொடுக்கக் கூடாது என்றும், பி.எல்.ஹெல்த் மிக்சுக்குதான் கொடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

பா.ஜ.க கூட்டத்தில்

பி.எல்.ஹெல்த் மிக்ஸ் ஏகபோகத்துடன் இந்த ஒப்பந்தப் புள்ளியை எடுத்துள்ளது. ஆவின் ஹெல்த் மிக்ஸுக்கு ஏன் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக அமைச்சர் நாசரும், அமைச்சர் சுப்பிரமணியனும் எதற்காக முரண்பட்ட அறிக்கையைக் கொடுக்க வேண்டும். இதைத் தெளிவுபடுத்த வேண்டியது அமைச்சரின் கடமை. என் மீது நிறைய வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. மின்சாரத்துறை அமைச்சர் ரூ.10 கோடிக்கு என் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இதுவரை ரூ.620 கோடிக்கு என் மீது தமிழ்நாட்டில் வழக்குகள் உள்ளன. சுகாதாரத்துறை அமைச்சர் என் மீது வழக்குத் தொடுத்தாலும் பயப்படமாட்டேன். யார் வழக்குத் தொடுத்தாலும், மிரட்டினாலும், பா.ஜ.க செய்யக்கூடிய பணியிலிருந்து பின் வாங்காது. நான் ஆதாரத்துடன் கூடிய குற்றச்சாட்டுகளை வைத்துள்ளேன். அதற்கான ஆவணங்களையும் வெளியிட்டுள்ளோம்.

ரஜினி ரசிகர்கள் இணைந்த விழாவில் பேசும் அண்ணாமலை

தொழில்நுட்பக் குழு ஆவின் பெயரைப் பரிந்துரை செய்ததா? இல்லையா? என்பதற்குப் பதில் அளிக்க வேண்டும். எல்-1,எல்-2 ஆவணங்களைக் கொடுக்க வேண்டும். நாங்களும் ஆவணங்களைக் கையில் வைத்துத்தான் பேசுகிறோம். சுகாதாரத்துறை அமைச்சர் இன்னும் நிறையப் பேச வேண்டும். அவருடைய வாயிலிருந்து நிறைய ஆதாரங்கள் வெளிவர வேண்டும். அதை வைத்து பா.ஜ.க-வின் ஆவணங்கள் நிறைய வரப்போகிறது. அதிலிருந்து அமைச்சர் தப்பிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.