தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிராமிய மற்றும் சினிமா பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். இவரது மனைவி அனிதாவும் பிரபல கிராமிய பாடகி தான்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற போது இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு போட்டிகளிலும், கச்சேரிகளிலும் ஒன்றாகப் பாடினர். அப்போது இவர்களிடையே காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
குப்புசாமி- அனிதா தம்பதியினர் இதுவரை சினிமா, மேடை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகள் வெளிநாடு என பல இடங்களில் பாடியுள்ளனர். தங்கள் பாடல்கள் வழியாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
புஷ்பவனம் குப்புசாமி – அனிதா தம்பதியரின் வீடு சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கிறது. இவர்கள் வீட்டின் மாடித்தோட்டம் வெகு பிரபலம்.
ஒரு வெற்றிலைக் கொடியில் ஆரம்பிக்கப்பட்ட இவர்கள் வீட்டுத் தோட்டம், இன்று நூற்றுக்கணக்கான தாவரங்களுடன் சோலைவனமாக காட்சியளிக்கிறது. 1,200 சதுர அடி கொண்ட மொட்டைமாடியில்’ வீட்டுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள், மூலிகைகள் என சிறப்பான முறையில் தோட்டத்தைப் பராமரிக்கின்றனர். இதன் மூலம் வீட்டுத்தேவையில் 80 சதவிகிதக் காய்கறிகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்கின்றனர்.
அனிதா சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார். அதில் மாடித்தோட்டம், பூஜையறை, சமையல் குறிப்புகள் என பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் அனிதா யூடியூபில் பகிர்ந்துள்ள புதிய வீடியோ இப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் அவரது வீட்டு மொட்டை மாடித் தோட்டத்தில் சிவப்பு, பிங்க், மஞ்சள் என பல வண்ணங்களில் பூக்கள் பூத்து குலுங்குகிறது.
வீடியோ ஆரம்பிக்கும் போதே கையில் கூடையுடன் பேசும் அனிதா, மொட்டை மாடிக்கு பூப்பறிக்க வந்திருக்கேன். மொட்டை மாடியில எவ்ளோ கலர்ஃபுல்லா பூக்கள் இருக்குனு பாருங்க.. காலையில இந்த பூக்கள பாக்கும்போது ரொம்ப ஆனந்தமா இருக்கு. இப்போ இந்த பூக்கள பறிச்சு சாமிக்கு வைக்க போறேன். .
அடுக்கு மல்லி, குண்டு மல்லி, மதுரை மல்லி என ஏகப்பட்ட மல்லி வகைகளை என் வீட்டுக்காரர் வாங்கி வச்சிருக்கார். வாங்கி வைக்கிறது மட்டுமில்ல, இதுல இருந்து தினமும் பூப்பறிச்சு பகவானுக்கு சாத்துவார். எனக்கும், என் மகள்களுக்கும் தொடுத்து கொடுப்பாரு. இது எல்லாமே அவரே விரும்பி பண்றது.
இப்படி பேசிக்கொண்டே கனகாம்பரம், பாரிஜாதம், செண்பகப்பூ , நித்தியமல்லி, ரோஜாச்செடி, என அனைத்தையும் ஒரு ரவுண்டு காட்டினார் அனிதா. இப்போ துபாய் போனோம். அங்க ஃபிளாவர் கார்டன்ல அவ்ளோ பூக்கள் இருந்தது. பார்க்கவே ரொம்ப அழகா இருந்தது.
அதைப்பார்த்து என் வீட்டுக்கார் ஆசைப்பட்டு, எல்லா கலர்லயும் பூக்களை வாங்கி குவிச்சிட்டாரு. இங்க கருப்பு நிறத்துல மட்டும்தான் மலர் இல்ல.. மத்த எல்லா நிறத்துலயும் இருக்கு என ஆனந்தம் பொங்க கூறுகிறார் அனிதா!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“