குவாஹாட்டி: அசாமில் ஆசிரியர்கள் பலர் எல்ஐசி முகவராக பணியாற்றி வருவதாக மாநில இடைநிலைக் கல்வித் துறைக்கு கடந்த மே மாதம் புகார்கள் வரத் தொடங்கின.
இதையடுத்து, “பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்கள் எல்ஐசி முகவராகவோ அல்லது உரிமம் பெற்ற வேறு எந்தவொரு தொழிலிலோ ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் மே 31-ம் தேதிக்குள் அப்பணியிலிருந்து விடுபட வேண்டும். இதனை பள்ளி ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, எத்தனை பேர் அவ்வாறு பணியாற்றி வந்தனர். எத்தனை பேர் அப்பணியிலிருந்து விலகினர் என அரசுக்கு பட்டியல் அனுப்ப வேண்டும்” என உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் அசாமில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 7-ம் தேதி வெளியானது. இதில் 56.49 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மேலும் 25 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை. 77 பள்ளிகளில் 10 சதவீதம் மற்றும் அதற்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதையடுத்து இன்சூரன்ஸ் மற்றும் பிற நிதி நிறுவனங்களின் முகவராக பணியாற்றும் ஆசிரியர்கள் மீது அசாம் அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.