சென்னை: இலங்கைக்கு உதவ, தனது ஒருநாள் ஊதியத்தை விட்டுக்கொடுக்க விருப்பமில்லை என்றும், அதற்கான காரணங்களை விளக்கியும் துணை ஆணையருக்கு உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு தலைமைக் காவலர் ஜனார்த்தனன் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு காவல் துணை ஆணையருக்கு எழுதியுள்ள கடிதம்: “நான் தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சேர்ந்து 18 வருடம் பூர்த்தி செய்து 19-வது வருடம் நடந்து வருகின்றது. தமிழ்நாடு அரசு சார்பாக, அரசு அலுவலர்கள் ஒரு நாள் ஊதியத்தை இலங்கை அரசுக்காக விட்டுக் கொடுக்க கீழ்க்கண்ட காரணங்களால் எனக்கு விருப்பம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
> நமது பாரத பிரதமரை கொன்றவர்கள் இலங்கை நாட்டினர்.
> நமது தமிழ் இனத்தை கொன்ற இலங்கை அரசாங்கம்.
> பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது அதில் காவல்துறையினர் பெரிதும் பாதிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
> அரசுக்கு ஈட்டிய விடுப்பு ஒப்புவித்த, பெற்ற பணபலனை தற்போது ஈட்டிய விடுப்பு ஒப்புவித்தல் ஆணையை அரசு ரத்து செய்ததால் ஆண்டுக்கு 15 நாட்கள் ஊதிய பலன் பாதிக்கப்பட்டுள்ளது.
> தற்போது மத்திய அரசு DA அறிவித்துள்ளது. ஆனால் அதை தமிழக அரசு இன்று வரை DA அறிவிக்கவில்லை.
> நீதிபதி கிருபாகரன் பலமுறை காவலர்களுக்கான ஊதியம் குறைவினை ஏற்றி தர கோரியும் அதற்கு இந்த தமிழக அரசு இதுநாள் வரை செவிசாய்க்கவில்லை.
மேலும், ” தனக்கு மிஞ்சி தான் தான தர்மம்” ஆகையால், அரசு அண்டை நாடான இலங்கைக்கு உதவி செய்தல் நல்ல எண்ணம். ஆனால், எனது குடும்பத்தை பராமரிக்கவே என்னுடைய சம்பளம் போதுமானதாக இல்லை என்பதை தெரிவித்துக் கொள்வதுடன் எனது ஒருநாள் ஊதியத்தை அரசுக்கு விட்டுக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை என்பதை இதன் மூலம் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.