தன் தனித்த குரல்வளத்தால், ரசிகர்களைக் கட்டிப்போட்டிருக்கும் மலேசியா வாசுதேவனுடன் ஒரு மினி பேட்டி. .
“பாட்டு, நடிப்பு தயாரிப்பு. டைரக்ஷன் போன்ற பல துறைகளையும் உங்களால் எப்படிச் சமாளிக்க முடிகிறது?”
“எல்லாமே ஒண்னுக்கொண்ணு சம்பந்தப்பட்டதுதானே! அதுமட்டுமல்ல, முதலில் நிறைய பாடிக் கொண்டிருந்தேன். பிறகு நடிக்கத் தொடங்கினேன். இப்போதுதான் தயாரிப்பு மற்றும் டைரக்ஷனில் இறங்கியிருக்கிறேன். இது ஒரு கஷ்டமான காரியமே இல்லை என்பது என் கருத்து.”
“நீங்கள் பாடிய பாடல்களில் உங்களை முணுமுணுக்க வைக்கும் அளவுக்குக் கவர்ந்த பாடல்..”
“முதல் மரியாதை படத்தில் இடம்பெறும் பூங்காற்று திரும்புமா? என்று தொடங்கும் பாடல்தான்’
“நீங்கள் பாடகரானது பற்றி.”
“என்னைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர் எம்.எஸ். விஸ்வநாதன். ஆனால் என்னை வளர்த்துவிட்டது இளையராஜாதான். (சிறிது யோசனைக்குப் பின்) இளையராஜா ஒரு ஜீனியஸ்ங்க”
“உங்கள் சொந்தத் தயாரிப்பான ‘ நீ சிரித்தால் தீபாவளி’ படத்தில் பாடல், இசைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுமா?”
“ஒரு படம் பிய்ச்சுக்கிட்டு ஓடுதுன்னா அதுக்கு முதல் காரணம் கதைதான்! பிறகுதான் பாட்டு, இசையெல்லாம். என்னோட இந்தப் படத்துல டைட்டில் சாங் சேர்த்து மொத்தம் ஐந்து பாடல்கள். இப்பல்லாம் சினிமால நிறைய பாடல்கள் வந்துதுன்னா மக்கள் எழுந்து போயிடறாங்க…'”
“பழைய பாடல்கள் மாதிரி ஏன் இன்றைய பாடல்கள் வருடக்கணக்கில் முணுமுணுக்கப்படுவதில்லை?”
“அப்பல்லாம் மாதம் ஒரு படம் வருவதே கஷ்டம். ஆனா இப்போ வாரத்துக்கு ரெண்டு படம் வருது. அப்புறம் எப்படிப் பாட்டு நினைவில் நிற்கும்?!”
“உங்களது முதல் படம்..?”
“ரத்தப்பேய் என்ற படம்தான்! இது மலேசியாவில் ரிலீஸான படம்.”
“மலையாளத்தில் வித்தியாசமான கிளாசிக்கல் படங்கள் வருவது மாதிரி தமிழிலும் நீங்கள் எடுக்கலாமே?”
“தமிழ்ப் படவுலகில் யாருமே பரிசோதனைக்குத் தயாராவதில்லை. என்னையும் சேர்த்துதான்!’
– த. வளவன்