சீயோல்: தென் கொரியாவைச் சேர்ந்த பாப் இசைக்குழு BTS பிடிஎஸ். உலகம் முழுவதும் இவர்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. இசையால் பல உள்ளங்களைக் கட்டிப்போட்டு இந்தக் குழு தனது பிரிவை அறிவித்துள்ளது.
அந்தக் குழுவில் உள்ள 7 பேரும் இனி தனித்தனியாக இயங்கப்போவதாக அறிவித்துள்ளனர். இவர்களால் தென் கொரிய பொருளாதாரத்திற்கு பில்லியன் டாலர் கணக்கில் வருவாய் கிடைத்துக் கொண்டிருந்தது. இவர்களின் பிரிவு தென் கொரிய அரசையும், உலக பாப் இசை ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பிடிஎஸ் குழுவில் உள்ள அனைவருமே 20 வயதுகளில் உள்ளவர்களே. லிப்ஸ்டிக்கும், விதவிதமான காதணிகளும், உள்ளம் கவர் குரலும், இசையுமே இவர்களின் அடையாளம்.
கடந்த 9 ஆண்டுகளாக இந்த இசைக்குழு ஏராளமான பாப் இசைப் பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்துவந்தது.
இந்நிலையில், அவர்கள் தனித்தனியாக இயங்கப்போவதாக அறிவித்தனர். பிடிஎஸ் குழுவின் ஆண்டு விழா கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. அதில் அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
இருப்பினும் “பாப் இசைக் குழுவை கலைக்கவில்லை. காலவரையற்ற பிரிவில் செல்கிறோம். எப்போது வேண்டுமானாலும் மீண்டும் இணையலாம்” என்ற ஆறுதல் தகவலை ரசிகர்களாகத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான யூடியூப் வீடியோவில் குழுவின் உறுப்பினர் RM பேசும்போது, “பிடிஎஸ் குழு மற்ற இசைக் குழுக்களைவிட வித்தியாசமானது என்று எனக்குத் தெரியும். ஆனால், இது போன்ற இசைக்குழுக்களில் இருந்தால் தனிப்பட்ட முறையில் வளர்ச்சி காண முடியவில்லை. எப்போது பார்த்தாலும் இசையமைக்க வேண்டும் அதுதொடர்பாகவே ஏதாவது செய்ய வேண்டும். ஒரு தனிநபராக 10 ஆண்டுகளில் நான் நிறைய மாறிவிட்டேன். எனக்கு தனியாக இருக்க கொஞ்ச அவகாசம் தேவைப்படுகிறது” என்றார்.
குழுவின் மற்றொரு உறுப்பினரான ஜிம் கூறுகையில், “எங்களின் முடிவுகளால் ரசிகர்கள் கவலையடையலாம். இதுவரை ரசிகர்கள் விரும்பும் கலைஞர்களாக இருந்துவிட்டோம். இனி நாங்கள் என்னமாதிரியான கலைஞராக இருக்க வேண்டுமோ அப்படி இருப்போம்” என்றார்.
வீடியோ முடியும்போது பிடிஎஸ் குழுவினர் அனைவருமே கண் கலங்கி உடைந்து அழுதனர். பிடிஎஸ் பிரிவு அறிவிப்பு வீடியோ இணையத்தில் மில்லியன் கணக்கில் வைரலாகிறது.
கே பாப் (KPop) , கே டிராமா (KDrama) என்பதெல்லாம் சர்வதேச ஷோபிஸ் உலகில் மிகவும் பிரபலம். கே என்பது கொரியாவை குறிப்பது. பிடிஎஸ் கொரிய பாப் குழு என்பதால் அவரக்ளின் இசை கே பாப் என்றழைக்கப்படுகிறது. கொரியாவில் உருவாகும் நாடகங்களும் தமிழ்நாட்டு கிராமங்கள் வரை பிரபலம். அவற்றை கே டிராமா என பொதுவாக அழைக்கின்றனர்.