எதிர்கட்சிகள் கூட்டத்திற்கு முன்பாகவே பிளவு: குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளர் ஆலோசனைக்கு 3 கட்சிகள் வர மறுப்பு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளர் ஆலோசனைக்கு மூன்று கட்சிகள் வர மறுத்துள்ளனர். மம்தா பானர்ஜியின் இக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே எதிர்கட்சிகள் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ஆகியவற்றுடன் சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியும் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

ஜூலை 16-இல் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில், எதிர்கட்சிகளின் வேட்பாளருக்கு வெற்றி பெறும் வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளன. பாஜக தலைமையில் ஆளும் கட்சிகளான தேசிய முன்னணி சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து பொது வேட்பாளரை அறிவிக்கும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியது. இதற்காக மூத்த தலைவரான மல்லிகார்ஜுனா கார்கே களம் இறங்கி செயல்படத் தொடங்கினர்.

எனினும், காங்கிரஸை புறந்தள்ளும் வகையில் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி திடீரென களம் இறங்கினார். டெல்லியில் இன்று கூட்டம் நடத்தி ஆலோசிக்க முடிவு செய்தார். இதற்காக, ஒரே சமயத்தில் 22 எதிர்கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார். ஆனால், இந்தக் கூட்டம் தொடங்கும் முன்பாகவே மூன்று எதிர்கட்சிகள் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன.

டெல்லியின் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால், மம்தாவின் கூட்டத்தில் கலந்துகொள்ள மறுத்து விட்டார். வேட்பாளராக நிறுத்தப்போவது யார் எனத் தெரிந்தால்தான் தன் ஆதரவு அளிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார். இத்தனைக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் ஜேக்ரிவால், திரிணமூல் தலைவர் மம்தாவிற்கு மிகவும் நெருக்கமானத் தலைவராகவும் கருதப்படுபவர். ஒடிசாவின் முதல்வரும் பிஜு ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக்கும், மம்தாவின் கூட்டத்திற்கு வர மறுத்துள்ளார்.

இதன் பின்னணியில் அவரது மாநிலத்தை சேர்ந்த பழங்குடித் தலைவரான திரவுபதி முர்முர் பெயரை பாஜக பரிசீலனை செய்வது காரணமாகக் கருதப்படுகிறது. இவர், ஜார்க்கண்டின் முன்னாள் ஆளுநரான பணியாற்றி ஆய்வு பெற்றவர். திரவுபதி ஆளும்கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், அவருக்கு ஆதரவளிப்பதை தவிர முதல்வர் பட்நாயக்கிற்கு வேறுவழியில்லை. இதையே முன்னிறுத்தி பிஜு ஜனதா வழக்கம் போல், இதர எதிர்கட்சிகளிடம் இருந்து ஒதுங்க விரும்புகிறது.

இவர்கள் இருவரை விட முக்கியமாக தெலங்கானா மாநில முதல்வரும், தெலங்கானா ரஷ்டிரிய சமிதியின் தலைவருமான சந்திரசேகர ராவ், இக்கூட்டத்திற்கு வர மறுத்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. பாஜக எதிராக கொடி பிடிப்பதில் முன்னணி வகிக்கும் இவர், காங்கிரஸுக்கும் அழைப்பு விடுத்ததை காரணமாக்கி உள்ளார். வழக்கமாக திரிணமூல் தலைவர் மம்தாவிடமிருந்து விலகி இருக்கும் காங்கிரஸ் இந்த முறை அவரது கூட்டத்தில் கலந்துகொள்ள முன்வந்துள்ளது.

இந்நிலையில், தெலங்கானா முதல்வரின் முடிவு இதர எதிர்கட்சிகளை திருப்திக்கு உள்ளாக்கி விட்டது. இக்கூட்டத்தின் மூலம் தேர்வாகும் பொது வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி இல்லை. எனினும், வரும் 2024-இல் மக்களவை தேர்தலில் எதிர்கட்சிகள் ஒற்றுமைக்கு அடித்தளமாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. தற்போது இதற்கான வாய்ப்பை தெலங்கானா முதல்வர் உள்ளிட்ட மூன்று கட்சிகள் தட்டிக் கழித்துள்ளன.

திரிணமூல் தலைவர் மம்தாவின் இன்றையக் கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மல்லிகாஜுர்னா கார்கேவும், ஜெய்ராம் ரமேஷும் கலந்து கொள்கின்றனர். சமாஜ்வாதியின் சார்பில் உபியின் முன்னாள் முதல்வரான அக்கட்சியின் தலைவருமானர் அகிலேஷ் சிங் யாதவ் கலந்து கொள்கிறார். இதன் கூட்டணிக் கட்சியான ராஷ்டிரிய லோக் தளத்தின் ஜெயந்த் சவுத்ரி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரணும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

சிபிஐ-யில் பினய் பிஸ்வாஸ், திமுகவில் எம்.பி டி.ஆர்.பாலு, சிவசேனாவின் சுபாஷ் தேசாய், தேசிய மாநாட்டு கட்சியின் ஒமர் அப்துல்லா, பிடிபியின் மெஹபூபா முப்தி ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.