எம்ஜிஎம் குழுமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் ஐடி ரெய்டு.. பின்னணி என்ன?

எம்ஜிஎம் குழுமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
எம்ஜிஎம் குழுமம் தமிழகம் மட்டுமல்லாது பெங்களூரு உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஏற்றுமதி இறக்குமதி, மதுபான தயாரிப்பு, மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகள், வெளிநாட்டு வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. எம்ஜிஎம் குழுமம் முதன்முதலில் 1963ஆம் ஆண்டு எம்.ஜி. முத்து என்பவரால் துவங்கப்பட்டு ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் கால்பதித்து, பின்னர் படிப்படியாக பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு தற்போது தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு நிறுவனங்களைத் தொடங்கி செயல்பட்டு வருகிறது.
இந்த குழுமத்தின் பெயரில் சென்னையில் அம்யூஸ்மெண்ட் பார்க் ஒன்றும் இயங்கி வருகிறது. இதன் மூலம் இந்திய அளவில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக எம்ஜிஎம் குழுமம் திகழ்ந்து வருகிறது. சாதாரண கூலி வேலையாக தொழிலை ஆரம்பித்து தற்போது ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்களை எம்ஜிஎம் குழுமம் குவித்துள்ளது.
image
இந்நிலையில் இன்று காலை முதல் தமிழகம், பெங்களூரு உட்பட எம்ஜிஎம் குழுமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் சென்னை, நெல்லை, செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னையில் சாந்தோம் முத்து பாண்டியன் அவென்யூ சாலையில் அமைந்துள்ள மாறன் வீட்டிலும், மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள கார்ப்ரேட் அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இச்சோதனைகள் நடைபெறுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
image
எம்ஜிஎம் குடும்பத்துக்குச் சொந்தமான 40 இடங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த 2007, 2011, 2012 நிதி ஆண்டுகளில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 46 ஆயிரம் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி ரிசர்வ் வங்கி சார்பில் அமலாக்கத் துறையினரிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.
image
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் எம்ஜிஎம் மாறன் சிங்கப்பூரில் பல கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை வங்கியில் வைத்துக் கொண்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பரிவர்த்தனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அவருக்கும் 35 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அமலாக்கத் துறையினரின் தொடர் விசாரணையில், எம்ஜிஎம் மாறனுக்குச் சொந்தமான 500 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டது.
தற்போது நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனையில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரித் துறையினரால் நடத்தப்படும் இந்த சோதனைக்கு பிறகே வரி ஏய்ப்பு தொடர்பான முழு விவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.