வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 5ஜி சேவைக்கான அலைக்கற்றை ஏலத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தாண்டு ஜூலைக்குள் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவில் தற்போது 4ஜி தொழில்நுட்பத்தை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். 2015ம் ஆண்டில் இருந்து நாட்டில் 4ஜி அலைக்கற்றை பயன்பாடு வந்தபிறகு தொழில்நுட்பத்துறை மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. அதிவேக இன்டர்நெட் சேவையால் ஆன்லைனை மையப்படுத்திய தொழில்கள் பெருமளவு வளர்ந்துள்ளன. அரசின் கொள்கை முடிவுகளான டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா உள்ளிட்ட பல திட்டங்களுக்கு டிஜிட்டல் தொடர்பு முக்கியமான ஒன்றாக இருந்துவருகிறது.
இந்த நிலையில், இதனை விட அதிவேக இணைய சேவையை பெறும் வகையில் 5ஜி சேவையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அதன்படி, தொலை தொடர்புத்துறையை மேம்படுத்த 2022ம் ஆண்டில் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படும் எனவும், 2023ம் ஆண்டுக்குள் 5ஜி சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு, ஏலத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு ஜூலைக்குள் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறும் என தெரிகிறது. 4ஜி சேவையை விட பத்து மடங்கு வேகம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. 5ஜி அலைக்கற்றை 20 ஆண்டுகளுக்கு ஏலம் விடப்பட உள்ளது. முன்னதாக, இந்தியாவில் 5ஜி தொழில்நுடப்பத்தை உருவாக்குவதற்காக இந்தியாவின் 8 தலைசிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு 5ஜி சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement