சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொண்டர்களை அமைதி காக்குமாறு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வந்தனர்.
ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து 2-வது நாளாக அவர் தனது ஆதரவாளர்களுடன் இன்றும் (புதன்கிழமை) ஆலோசனை நடத்தினார். இதேபோல் எடப்பாடி பழனிசாமியும் தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார். இதனால், அதிமுகவில் மீண்டும் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது.
கடந்த, 2019-ல் நடைபெற வேண்டிய அதிமுக அமைப்பு தேர்தல் கரோனாவால் தள்ளிப்போனது. இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பரில் பதவி வாரியாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி மற்றும் படிப்படியாக மாவட்டச் செயலர்கள், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டும். பின்னரே, தேர்தல் ஆணையத்தில் அதை சமர்ப்பிக்க முடியும். இதையொட்டி, அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் மற்றும் மாவட்டச் செயலர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக கட்சி நிர்வாகக் குழு முடிவெடுக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) June 15, 2022