கரூர்: கரூரில் தடையை மீறி இருசக்கர வாகன பேரணியில் ஈடுபட்ட மாநில, மாவட்ட பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட 72 பேர் கைது செய்யப்பட்டனர். மாநிலத் தலைவரின் உறவுப் பெண் வாகனத்தை விட்டு வரமறுத்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
கரூரில் தடையை மீறி பாஜக இருசக்கர வாகன பேரணியாக சென்றனர். இதையடுத்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 72 பேர் கைது நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுத்தனர். கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவில் பாஜவினரை போலீஸார் கைது செய்த நிலையில், வாகனத்தைவிட்டு வரமறுத்த மாநிலத் தலைவர் அண்ணாமலையின் உறவினரான சுந்தரி, ஏடிஎஸ்பி கண்ணன் மற்றும் போலீஸாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அங்கிருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.
பிரதமர் மோடியின் ஆட்சி 8 ஆண்டு நிறைவையொட்டி அவரது சாதனைகளை விளக்கும் வகையில் கரூர் மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் இருசக்கர வாகன பேரணி மாவட்டத் தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் கரூர் வெண்ணெய்மலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் இருந்து இன்று தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து ஏடிஎஸ்பிக்கள் ராதாகிருஷ்ணன், கண்ணன் ஆகியோர் தலைமையில் டிஎஸ்பி தேவராஜ், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர்கள், வெங்கமேடு உள்ளிட்ட காவல் நிலைய போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். போலீஸார் பேரணிக்கு அனுமதி மறுத்து சாலையில் தடுப்புகளை வைத்து மறித்தனர்.
மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் ராஜேஷ், சேலம் கோட்ட பொறுப்பாளர் சிவசுப்பிரமணியன், மாவட்டத்தலைவர் வி.வி.செந்தில்நாதன், மாவட்ட இளைஞரணி தலைவர் தீனசேனன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதையடுத்து போலீஸார் பேரணி செல்லும் சாலையில் இரும்புத்தடுப்புகள் (பேரிகார்டு) வைத்து தடுத்திருந்ததால் கிடைக்கும் வழியில் பேரணியாக செல்லுங்கள் என மாவட்ட இளைஞரணி தலைவர் தீனசேனன் சொல்ல, அரசு காலனி நோக்கி செல்லும் சாலையில் அனைவரும் புறப்பட போலீஸார் அச்சாலையை செல்வதையும் தடுத்ததால் காட்டுப் பகுதியில் இருந்து ஒற்றையடி வழிகளில் புகுந்து இருசக்கர வாகனங்களில் பேருந்து நிலைய ரவுண்டானா நோக்கி புறப்பட்டனர்.
இதனால், செய்வதறியாது திகைத்த போலீஸார் அங்கிருந்த மாவட்டத் தலைவர் வி.வி.செந்தில்நாதன் உள்ளிட்ட நிர்வாகிகளை வெங்கமேடு போலீஸார் கைது செய்தனர். வெங்கமேடு பகுதியில் இரு சக்கர வாகனங்களை போலீஸார் முற்பட்ட அதனையும் மீறிச் சென்றனர். கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா சிக்னலில் நின்ற பாஜகவினரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்வதாகக் கூறி போலீஸ் வாகனத்தில் ஏறக் கூறினர்.
பாஜகவினர் தாங்கள் கட்சி அலுவலகத்திற்கு செல்வதாக வாக்குவாதத்தில் இதையடுத்து அவர்களது இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அப்போது வாகனத்தை விட்டுவிட்டு கைதாக மறுத்து மாநிலத் தலைவர் அண்ணாமலையின் உறவினரான சுந்தரி என்பவர் போலீஸாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இருப்பினும் அவரை இழுத்துச் சென்று கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அதனை அங்கு கூடியிருந்தவர்கள் பலரும் வேடிக்கை பார்த்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் வெங்கமேட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.