சிங்கங்களுக்கான சரணாலயமாக விளங்குகிறது குஜராத் மாநிலத்தில் உள்ள ‘கிர் தேசிய பூங்கா’. இந்த சரணாலயத்தில் 5 வயதான ஆசிய சிங்கம் ஒன்றின் நடவடிக்கை வித்தியாசமாக இருந்தது. அதாவது, பக்கத்திலேயே இரை இருந்தாலும் அதை கவனிக்காமலும், கண்டுகொள்ளாமலும் இருந்தது அந்த சிங்கம். இதன் நடவடிக்கைகளை கவனித்த பூங்கா அதிகாரிகள் குழப்பமடைந்தனர். பின்னர்தான், சிங்கத்தால் பக்கத்தில் உள்ள பொருள்களைப் பார்க்க முடியவில்லை என்பதை உணர்ந்தனர். எனவே, சிங்கத்தை மீட்டு சோதனை செய்தனர்.
சிங்கத்தை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது, சிங்கத்தின் இரு கண்களிலும் கண்புரை (cataracts) முற்றிய நிலையில் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. பார்வையை இழந்த சிங்கத்திற்கு அறுவை சிகிச்சை மூலமே பார்வையை மீட்க முடியும், அதுதான் சரியான தீர்வாகும் என மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
இந்த சரணாலயத்தில் இதுவரை சிறிய விலங்குகளுக்குத்தான் கண்புரை சிகிச்சை அளித்து வந்தனர். சிங்கத்திற்கு கண்புரை சிகிச்சை செய்வது இதுதான் முதல்முறை. எனவே இதற்காகவே அங்குள்ள மருத்துவர்கள் பல ஆய்வுக் கட்டுரைகளை படித்தனர். நிபுணர்களிடமும் ஆலோசனை மேற்கொண்டு திட்டமிட்டனர். இறந்த சிங்கத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார்கள். அதன் உடற்கூறு அமைப்புகளை ஆய்வு செய்த மருத்துவர்கள், கண் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தனர்.
சிங்கத்தின் உடற்கூறியல் அமைப்புகளை நன்கு அறிந்து கொண்ட மருத்துவர்கள், சிங்கத்திற்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்தனர். கண்ணில் இருக்கும் இயற்கையான லென்ஸை அகற்றி, பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட செயற்கை லென்ஸை மாற்றி அமைத்தனர். சிங்கத்தின் பார்வை மெல்ல மீண்டது. அடுத்ததாக மறு கண்ணிலும் அறுவை சிகிச்சை செய்தனர். சிங்கத்தின் இரு கண்களிலும் அறுவை சிகிச்சை முடிந்தது. சிங்கம் நல்ல பார்வைத்திறனுடன் தன் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது, விரைவில் காட்டில் விடப்படும் என சரணாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.