ஸ்ரீநகர் : ஜம்மு – காஷ்மீரில் வங்கி மேலாளரை சுட்டுக் கொன்ற தீவிரவாதி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக அப்பாவி மக்கள், அரசு ஊழியர்கள், சிறுபான்மையினர், போலீசார் போன்றவர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த மாதம் தாசில்தார் அலுவலகத்தில் நுழைந்த தீவிரவாதிகள், பண்டிட் பிரிவை சேர்ந்த ராகுல் பட் என்ற ஊழியரை சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து, 2 போலீசாரையும் 2 ஆசிரியைகளை சுட்டு கொன்றனர். இதனால், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் இடையே பீதி நிலவுகிறது. இந்நிலையில், கடந்த ஜூன் 2ம் தேதி குல்காம் மாவட்டம், அருகே மோகன்போராவில் உள்ள எல்லாக்கி தெஹாதி வங்கியில் திடீரென நுழைந்த தீவிரவாதி, அங்கிருந்த விஜயகுமார் என்ற மேலாளரை சுட்டுக் கொன்றான். இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஹனுமன்கர் பகுதியை சேர்ந்தவர். கடந்த பிப்ரவரியில்தான் திருமணம் நடந்தது. மனைவி அங்கேயே இருக்கிறார். 2 வாரங்களில் சொந்த மாநிலத்துக்கு விஜயகுமார் செல்ல இருந்த நிலையில், தீவிரவாதி அவருடைய உயிரை பறித்து விட்டான். இந்த தாக்குதலுக்கு பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், வங்கி மேலாளரை சுட்டுக் கொன்ற தீவிரவாதி ஜான் முகமது லோனை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் காஞ்சியுலார் பகுதியில் நள்ளிரவில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 2 சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில் ஒருவன் வங்கி மேலாளர் விஜயகுமாரை சுட்டுக் கொன்ற ஜான் முகமது லோன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.