காஷ்மீர் படுகொலை, இஸ்லாமியர் தாக்குதல் இரண்டும் வன்முறையே – சாய் பல்லவி அதிரடி கருத்து

காஷ்மீரில் பண்டிட்டுகளின் படுகொலைக்கும், பசுவுக்காக மனிதர்கள் தாக்கப்படுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என சாய்பல்லவி கூறியுள்ளது நெட்டிசன்களிடையே வைரல் ஆகியுள்ளது.

வேணு உடுகுலா இயக்கத்தில் நடிகர் ராணா டகுபதியின் ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ள ‘விரத பர்வம்’ திரைப்படம் வருகிற ஜுன் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் சாய்பல்லவி நக்சலைட் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து இதற்கான புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். படம் தொடர்பாக நடிகை சாய் பல்லவியும் பேட்டியளித்து வரும்நிலையில், யூ-ட்டியூப் ஒன்றிற்கு சாய் பல்லவி அளித்துள்ள பேட்டி தான் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

நீங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் இடதுசாரி இயக்கங்களால் ஈர்க்கப்பட்டவரா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில், “நான் நடுநிலையான குடும்பச் சூழலில் வளர்ந்தேன். நல்ல மனிதராக இருக்க வேண்டு என்று கற்று கொடுக்கப்பட்டுள்ளது. இடதுசாரி, வலதுசாரி என இரண்டையும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எது சரி, எது தவறு என்று நம்மால் ஒருபோதும் கூற முடியாது.‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தில் பண்டிட்டுகள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பதை காட்டி இருக்கிறார்கள். ஆனால், சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது.

பசுவை கொண்டு சென்ற ஒரு நபரை இஸ்லாமியர் என்று கருதி கும்பலாக தாக்குகிறார்கள். அந்த நபர் கொல்லப்பட்டவுடன் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடுகிறார்கள். காஷ்மீரில் அன்று நடந்ததற்கும் தற்போது நடந்து கொண்டிருப்பதற்கும் என்ன வித்தியாசம்?. நீங்கள் நல்லவராக இருக்காவிட்டால், இடதுசாரியாக இருந்தாலும, வலதுசாரியாக இருந்தாலும் நீதி கிடைக்காது.

நான் நடுநிலையானவள். பெரிய எண்ணிக்கை கொண்ட மக்கள், சிறிய எண்ணிக்கை கொண்ட மக்களை தாக்கினால் அது தவறு. சரிசமமாக உள்ள இருவருக்கிடையேதான் போட்டி இருக்க வேண்டும்” இவ்வாறு சாய் பல்லவி தெரிவித்த கருத்து தற்போது வைரல் ஆகியுள்ளது. ஒரு சிலர் சாய் பல்லவிக்கு ஆதரவு தெரிவித்தாலும், ஒரு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.