குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெறவிருப்பதை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது குறித்து, ஆளுங்கட்சியாக இருக்கும் பா.ஜ.க மற்றும் எதிர்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன. இந்த நிலையில், குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசிக்க மம்தா பானர்ஜி, 22 எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன்படி டெல்லியில் மம்தா தலைமையில் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்டக் கட்சிகள் கலந்துகொள்கின்றன.
இந்த நிலையில், ராஜ்ய சபா எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே `காங்கிரஸ் இல்லாமல் குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்ய முடியாது’ எனத் தெரிவித்திருக்கிறார்.
வேட்பாளர் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக தனியார் ஊடகத்திடம் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, “எங்களிடம் கிட்டத்தட்ட 50 சதவிகித வாக்குகள் இருப்பதால், காங்கிரஸ் இல்லாமல் குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்வதென்பது நடக்காது. ஆனாலும், கூட்டத்துக்கு நாங்கள் ஒன்றாகச் சென்று போராடுவோம். பா.ஜ.க-வுக்கு எதிராகவே நாங்கள் போராட விரும்புகிறோம். மாறாக நாங்கள் ஒற்றுமையை உடைக்க விரும்பவில்லை.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பெரிய தலைவர்கள் யாரும் இதில் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும், எங்களுக்கு ஒற்றுமையுடன் கூடிய ஒருமித்த வேட்பாளர் வேண்டும்” எனக் கூறினார்.
இந்தக் கூட்டத்தில், டி.ஆர்.எஸ், ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்டக் கட்சிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து ஆம் ஆத்மி கட்சி, `குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்த பின்னரே எங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிப்போம்’ என்று கூறியிருக்கிறது.