குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 உரிமைத்தொகை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

மதுரை: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான தரவுகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

மதுரையில் அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 25 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் பள்ளி கட்டடத்தை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று திறந்து வைத்தார்.

பின்னர் மதுரை மகபூப் பாளையம் பகுதியில் உள்ள சட்ட மன்ற அலுவலகத்தில் நிதியமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களிடம் அரசு நேரடியாக கொள்முதல் செய்யப்பட உள்ளது. அதன்படி 133 நிறுவனங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தன. அவற்றில் 25 நிறுவனங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. புதிய கண்டுபிடிப்புகளையும் இளைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக நிறுவனத்தின் கொள்முதல் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவதற்கான விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நகைக்கடன் தள்ளுபடி, 4 ஆயிரம் ரூபாய் கடன் நிவாரண உதவி வழங்கியது போன்று தகுதியுடைய நபர்களுக்கு உரிமைத்தொகை வழங்குவதற்கான விவரங்களை சேகரித்து வருகிறோம். எவ்வளவு விரைவில் உரிமைத் தொகை வழங்க முடியுமோ அவ்வளவு விரைவில் வழங்கப்படும்” என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் சிங் காலோன், மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.